×

கல்வியை காவிமயமாக்க மத்திய பாஜ அரசு திட்டம்

கரூர், ஜன. 24: கல்வியை காவிமயமாக்க திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுகிறது என்று கி.வீரமணி குற்றம் சாட்டினார். கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பொதுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கரூர் குமரன் சிலை அருகே நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காளிமுத்து வரவேற்றார். துணைத்தலைவர் கார்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பேங்க் சுப்ரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது: கல்வி மனிதனின் அடிப்படை உரிமை. சாதி அடிப்படையில் கல்வி பெறும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்பதற்காக பெரியால் குரல் கொடுத்தார். நவீன குலக்கல்வி திட்டமே புதிய கல்விக் கொள்கையாகும். கல்வியை காவிமயமாக்க திட்டமிட்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது.

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது கொடுமை. 5, 8, 10, 11, 12 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினாலும் எதுவும் நாட்டுக்கு உதவாது. ஊழலை ஒழிக்கவே நீட் தேர்வு என்கின்றனர். ஆனால் ஆள் மாறாட்டம் என்ற மிகப் பெரிய ஊழலை நீட் கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வை எதிர்க்கிறோம் என கூறும் தமிழக அரசு அதற்கு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. முதல்வராக இருந்த ஜெயலலிதா நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றார். ஆனால், தற்போதைய ஆட்சி அப்படியில்லை. எந்த மாநிலம் நீட் தேர்வை விரும்பவில்லையோ, அந்த மாநிலத்துக்கு விலக்கு அளிக்கலாம்.
நாம் அமெரிக்கா மருத்துவர்களை விரும்புகிறோம். ஆனால் அந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்திய மருத்துவர்களைத்தான் விரும்புகின்றனர். காவல்துறையில் பெண்கள் பணியாற்றுகின்றனர். அதற்கு தீர்மானம் போட்டு வித்திட்டவர் பெரியார்தான். கடந்த 1921ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த கூட்டத்தில் ராணுவத்திலும் பெண்கள் இருக்க வேண்டும் என அவர் கூறி அதற்கான அடித்தளமிட்டார். தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக இருந்த நுழைவுத்தேர்வினை திமுக, திக ஆகிய கட்சிகள் போராடி விரட்டினோம். தற்போது அனைத்து துறைகளிலும் நம் பிள்ளைகள் உள்ளனர். அதற்கு காரணம் நம் தலைவர்கள் என்றார்.

Tags : BJP ,government ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...