×

வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்ற புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கரூர், ஜன. 24: உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்த நிலையில் வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் வலியுறுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் வெள்ளியணையில் பாசனக்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. மழையின்மையால் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக குளத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் வரவில்லை. தொடர்ந்து வறட்சி மழையின்மை காரணமாக மக்கள் குடிநீருக்கே சிரமப்படுகின்றனர். கர்நாடக பெருவெள்ளம் காரணமாக 3 மாதத்திற்கு முன்னர் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. உபரிநீரை பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தாததால் குளத்திற்கு தண்ணீர் வரவில்லை.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வெள்ளியணை பெரிய குளத்திற்கு குடகனாற்றில் இருந்து தண்ணீர் வரும். கடந்த 5 ஆண்டுகளாக மழையின்மை காரணமாக குளத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் வரவில்லை. பிறபகுதிகளில் மழை பெய்தும் குடகனாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் கரூர் மாவட்ட எல்லையிலும் குடகனாறு அணை உள்ளது. காவிரியில் உபரிநீர் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு இப்பகுதி வழியாக குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பிற ஊர்களுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய் அருகாமையிலேயே உள்ள வெள்ளியணைக்கு தண்ணீரை கொண்டு வர திட்டம் செயல்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். காவிரியாற்றில் இருந்து 17 கிமீ உள்ளது வெள்ளியணை பெரியகுளம். ராட்சத குழாய்களை அமைத்து உபரிநீர் வரும் காலங்களில் நீர் உந்து செய்யப்பட்டு குளத்தை அடையுமாறு திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாம். பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.

தற்போது மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தும் இந்த நீரை முழுமையாக பயன்படுத்த முடியாமல் கொள்ளிடம் வழியாக வீணாக போய் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. மாயனூரில் இருந்து வெள்ளியணை 17 கிமீ தூரத்தில் தான் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பாசனத்திற்கும் நீர்கிடைக்கும். நீராதாரமும் பெருகும். நீர் ஆதாரத்தை பெருக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் 450 ஏக்கர் பரப்பளவு வேளாண் நிலங்கள் பயனடையும். 10 ஆயிரம் விவசாய குடும்பத்தினர் பயனடைவார்கள். வெள்ளியணை, ஜெகதாபி, பொரணி, உப்பிடமங்கலம், சேங்கல், காணியாளம்பட்டி, பஞ்சப்பட்டி, வடகம்பாடி, முத்தம்பட்டி, குமாரபாளையம்,.செல்லாண்டிபட்டி, மணவாடி, கத்தாளப்பட்டி போன்ற ஊர்கள் உள்ளிட்ட அய்யர்மலை விவசாயிகள் பயனடைவார்கள். போர்க்கால அடிப்படையில் குளத்திற்கு தண்ணீர் கொண்டுவரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சித்தேர்தல் நிறைடைந்து மூன்றடுக்கு நிர்வாகிகள் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி பதவியில் இருப்பவர்கள் நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : representatives ,pond ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...