×

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.5 கோடியில் 3 புதிய பூங்காக்கள்: 6 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்,..ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு

சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.5 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு, ஆறு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை:  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுமை பரப்பளவை அதிகரித்து பொதுமக்களுக்கு இயற்கையான மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலை அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை  மாநகராட்சி மேற்கொண்டு  வருகிறது. அதன் அடிப்படையில் மாநகராட்சியில் 632 பூங்காக்கள், 99 சாலை மைய தடுப்புகள், 99 போக்குவரத்து தீவுத்திட்டுகள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்திய அரசாங்கம் மூலம்  நகர்ப்புறங்களில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக அடல் புனரமைப்பு மற்றும் நகர்ப்புற திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நகர்ப்புறங்களில் பசுமைப்பரப்பை அதிகரிப்பதற்காக பூங்காக்கள் உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மாநகரின் பசுமை பரப்பை  அதிகப்படுத்த மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக பூங்காக்களை உருவாக்க ஒவ்வொரு ஆண்டும் மாநில வருடாந்திர செயல் திட்டத்தின் கீழ் பசுமை இடங்கள் மற்றும் பூங்காக்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  இதனடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி மூலம் கடந்த 2015-16, 2016-17, 2017-20 என  நான்கு ஆண்டுகளில் 55 பூங்காக்கள் 37.74 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதன் தொடர்ச்சியாக 2018-19ம் நிதியாண்டின் ஊக்க நிதியின் மூலம் மாதவரம் மண்டலம், வார்டு-23, வி.எஸ்.மணி நகர் 3வது தெருவில் (வடக்கு) 565.20 ச.மீ பரளப்பளவில் 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்காவும், தேனாம்பேட்டை  மண்டலம், வார்டு-111, நுங்கம்பாக்கம், ரட்லண்ட் கேட் 2வது தெருவில் 1235.65 ச.மீ பரப்பளவில் 53.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்காவும், பெருங்குடி மண்டலம், வார்டு-188, வேளச்சேரி, ஜே.வி.நகர், எம்.ஆர்.டி.எஸ் அருகில் 724.33 ச.மீ  பரப்பளவில் 48.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா என மொத்தம் 1.5 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

Tags : parks ,corporation ,areas ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 இடங்களில் கைத்தறி பூங்கா