×

மதுராந்தகம், செய்யூர் தாலுகாக்களில் ரேஷன் பொருள் சப்ளை இல்லை

சென்னை, ஜன. 24: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட நியாயவிலை கடைகளில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம்  முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழக அரசு வழங்கிய ₹1000 ரொக்கப்பணம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், 2 அடி நீள கரும்பு துண்டு  ஆகியவை வழங்கப்பட்டது. இதனால், இந்த மாதத்திற்கான (ஜனவரி) ரேஷன் பொருட்களான அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவைகள் சில நாட்கள் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் நேற்று முன்தினம் (22ம் தேதி) முதல்  ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட மதுராந்தகம், செய்யூர் தாலுகா பகுதிகளில் உள்ள சுமார் 110 நியாயவிலை கடைகளில் இந்த மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில்  உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் கடைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து அந்த மாவட்ட சரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலம் பொருட்கள் சப்ளை  செய்யப்படும். லாரி வாடகை சரியாக வழங்கப்படாததால் ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யப்படவில்லை என்று கூறினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இந்த பிரச்னையில் தலையிட்டு இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் அனைத்து  கடைகளுக்கும் நகர்வு செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : talukas ,Cheyyur ,
× RELATED பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி வாய்க்கால் சீரமைப்பு