×

அம்பத்தூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் மாசடையும் தண்ணீர்

அம்பத்தூர், ஜன. 24: அம்பத்தூர் ஏரியில் நாளுக்குநாள் கழிவுநீரும், குப்பைகளும் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்வதாக பொதுமக்கள்  குற்றம்சாட்டுகின்றனர்.அம்பத்தூர் ஏரி 380 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி தண்ணீரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்றியுள்ள பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
பின்னர், நாளுக்கு நாள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஏரியில் விடப்பட்டதால் தண்ணீர் மாசு அடைந்துவிட்டது. இதன் பிறகு சுற்றியுள்ள மக்கள் ஏரி நீரை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள்  கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருவ மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டது. அப்போது அம்பத்தூர் ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதனை சமூக விரோதிகள் சாதகமாக பயன்படுத்தி ஏரியை ஆக்கிரமித்தனர்.

குறிப்பாக அம்பத்தூர், திருமுல்லைவாயல், அயப்பாக்கம் பகுதிகளை ஒட்டிய ஏரி கரையை முழுமையாக ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் அமைத்தனர். மேலும் உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகளின் ஆதரவுடன் ஏரிக்குள்ளே சாலையையும்  அமைத்து விட்டனர். இதன் விளைவாக 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள், கடைகளுக்கு மின் வாரியம் மின் இணைப்பு கொடுத்துள்ளது.கடந்த சில ஆண்டாக பருவ மழையின்போது அம்பத்தூர் ஏரி நிறைந்து  வழியும்போதெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகளில் தண்ணீர் புகும். அப்போது அவர்கள் வீடுகளை பாதுகாத்து கொள்ள கலங்கல் பகுதியை வெட்டி ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவது வழக்கம்.

இந்த அளவுக்கு ஆக்கிரமிப்பு அதிகரித்ததன் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரிக்குள் விட தொடங்கினர். இதனால் ஏரி நீர் மாசு அடைந்து வருகிறது.  இதோடு மட்டுமல்லாமல், அப்பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகள்,  பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளையும் ஏரியில் கொட்டி வருகின்றனர். இதனால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசும் அளவுக்கு மாறி வருகிறது.  எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்பத்தூர் ஏரியில் உள்ள  ஆக்கிரமிப்பை அகற்றவும், கழிவுநீர் மற்றும் குப்பைகள் கலப்பதை தடுக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Ambattur lake ,
× RELATED அம்பத்தூர் ஏரியில் படகில் மீன் பிடித்த போது மின்னல் தாக்கி தொழிலாளி பலி