×

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புறக்கணிக்கப்படும் புற தேர்வர்கள் கானல் நீராகும் தமிழ் மாணவர்களின் பி.எச்.டி பட்டம்

குளச்சல், ஜன. 24: புற தேர்வாளர்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் புறக்கணிப்பதால் பிஎச்.டி. ஆராய்ச்சி மாணவர்கள் டாக்டர் பட்டம் பெறுவது கானல் நீராக உள்ளது. பிஎச்.டி.மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிக்கு  வழிகாட்டிகளை அணுகி அவர்களுடைய ஒப்புதலுடன் ஆய்வு தலைப்பை தேர்வு செய்து 1 முதல் 5 ஆண்டுவரை ஆய்வு மேற்கொண்டு பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு ஏடுகளை சமர்ப்பிக்கின்றனர். பல்கலை. விதிமுறைப்படி வழிகாட்டி ஆய்வு  ஏடுகளை மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 5 அக தேர்வாளர் (தமிழகத்தை சேர்ந்தவர்கள்), 5 புற தேர்வாளர்கள் (பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள்) என 10 பேராசிரியர்களை தேர்வு செய்கின்றனர். இந்த பேராசிரியர்கள்  பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பி வைப்பர். பல்கலைக்கழகம் அக தேர்வாளர் மற்றும் புற தேர்வாளர் பட்டியலிலிருந்து தலா ஒருவர் வீதம் 2 பேரை தேர்வு செய்து ரகசியமாக ஆய்வு ஏடுகளை மதிப்பீடு செய்ய அனுப்பி வைக்கும்.

அவர்கள் இருவரின் மதிப்பீடு அறிக்கையும், இந்த ஆய்வு ஏடு ஆய்வு பட்டம் அளிக்க தகுதியானது என பரிந்துரை செய்யப்பட்டால், இந்த இருவரில் ஒருவரை பல்கலைக்கழகம் வாய் மொழி தேர்வு நடத்த புற தேர்வாளரை அனுமதித்து பின்னர்  அந்த பரிந்துரையும் ஏற்புடையதாக இருந்தால் பி.எச்.டி பட்டம் வழங்க பல்கலை.க்கு பரிந்துரை செய்யப்படும். இந்நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பிருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. புற தேர்வாளர்களை தேர்வு செய்ய இந்தியா  முழுவதும் உள்ள மாநிலங்களை 5 மண்டலங்களாக பிரித்தது. 5 மண்டலங்களிலிருந்தும் 5 தேர்வாளர்கள் பட்டியல்களை அனுப்ப வழிகாட்டிகளை கேட்டுள்ளது. ஆனால் இந்த 5 மண்டலங்களிலும் ஒரு சில மண்டலங்களை தவிர பிற  மண்டலங்களில் தமிழ் பாடங்களோ, ஆய்வு மையங்களோ இல்லை. தமிழ் ஆய்வு மையம், தமிழ் பாடம் இருக்கும் கல்லூரிகள், பல்கலை.யில் உள்ள மண்டலங்களில் பேராசிரியர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் அனுமதி பெற்று புற  தேர்வாளர்கள் பட்டியலை பல்கலை.க்கு அனுப்பி வைத்தால் பல்கலைக்கழகம் புறக்கணித்து விடுகிறது.

4 மாதங்களுக்கு பின்பு பட்டியல்களை திருப்பி அனுப்புகிறது. இப்படி பல முறை புற தேர்வாளர்கள் பட்டியல் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் பி.எச்.டி பட்டம் பெற முடியாமல்  உள்ளனர். வழிகாட்டிகள் இரு தலை கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர். கேரள பல்கலைக்கழகம் மொழி பாடங்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளது. தமிழகத்தில் எம்.எஸ்.பல்கலை.யும் மொழி பாடங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என  தமிழ் ஆய்வு மாணவர்கள் விரும்புகின்றனர். விதிவிலக்கு அளிக்காவிட்டால் தமிழ் ஆராய்ச்சி மாணவர்களின் பி.எச்.டி பட்டம் கானல் நீராகிவிடும். எனவே தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் பி.எச்.டி பட்டம் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

விதிவிலக்கு அளிக்க வேண்டும்:
இது குறித்து தமிழ்நாடு காங். ஆராய்ச்சித்துறை ஒருங்கிணைப்பாளர் ஆன்டனி விஜிலியஸ் கூறியதாவது: தமிழ் பிஎச்டி மாணவர்கள் ஆய்வு பட்டம் பெற முடியாத  நிலை  ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் எம்.எஸ்.பல்கலை. மாணவர்கள் ஆய்வு   பட்டம்  பெற  முடியாத அளவில் விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆய்வு ஏடை மதிப்பீடு செய்து   அறிக்கை சமர்ப்பிக்க புற தேர்வாளர்களை தமிழ் பாடம் இல்லாத   மண்டலத்திலிருந்து தேர்வு செய்ய கூறியுள்ளது அபத்தமானது. இதனை  மாற்றி முன்பு   போல் புற தேர்வாளர்களை தேர்வு செய்ய வேண்டும். கேரள பல்கலை. மொழி   பாடங்களுக்கு விதி விலக்கு அளித்துள்ளது போல் தமிழக அரசும் மொழி   பாடங்களுக்கு விதி விலக்கு அளித்து தமிழக பிஎச்.டி.மாணவர்கள்  ஆய்வு பட்டம்   பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பேராசிரியர்களும் தவிப்பு:
மாணவர்கள் மட்டுமல்ல கல்லூரி  பேராசிரியர்களும் தமிழ் பி.எச்.டி பட்டம் பெற  விரும்புகின்றனர். பி.எச்.டி பட்டம்  பேராசிரியர்களின் தகுதியை உயர்த்தும் என்பதால் பேராசிரியர்களும் தமிழ்  பி.எச்.டி பட்டம் பெற முடியாமல் உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது

Tags : Examiners ,Manomanyam Sundaranar University ,Kanal Niram Tamil ,
× RELATED நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 9...