×

களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலைக்கு தீவிரவாதிகள் பயன்படுத்தியது எர்ணாகுளம் கழிவுநீரோடையில் துப்பாக்கி மீட்பு

நாகர்கோவில், ஜன.24: எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி எர்ணாகுளத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே கழிவுநீர் ஓடையில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி ராணுவத்தினர் பயன்படுத்துவது என்று  போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கடந்த 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு  செய்து திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் கோட்டார் இளங்கடையை சேர்ந்த தவுபிக் ஆகியோரை கைது செய்தனர்.  இவர்கள் மீது உபா சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.  இவர்களை  10 நாள் காவலில் வைத்து விசாரிக்க நாகர்கோவில் கோர்ட் அனுமதி அளித்துள்ளது .

வில்சன் கொலைக்கு துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. விசாரணையில் இந்த கொலைக்கு துப்பாக்கி சப்ளை செய்தது பெங்களூருவை சேர்ந்த இஜாஸ் பாஷா என்பது தெரியவந்தது.கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி  எங்கு யாரிடம் உள்ளது என்று போலீஸ் காவலில் உள்ள தீவிரவாதிகளிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். குமரி மாவட்ட எஸ்.பி நாத், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி டிஎஸ்பி கணேசன் ஆகியோர் கொண்ட  தனிப்படை இவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்களை 2 பேரும் கூறியதாக தெரிகிறது. கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை போலீசார் முக்கிய ஆதாரங்களாக  கருதுகின்றனர். எனவே அதை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் போலீசாருக்கு எழுந்தது. இது தொடர்பாக தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் கத்தி மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை தப்பிச்செல்லும் போது  வழியோரத்தில் வீசிவிட்டோம் என்று முதலில் கூறியுள்ளனர். எந்த பகுதியில் வீசினர் என்பதை கண்டறியும் வகையில் போலீசார் தீவிரம் காட்டினர். இதற்காக நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் நாகர்கோவிலில் நேசமணிநகர் காவல்  நிலையம் பகுதியில் இருந்து வேனில் தீவிரவாதிகள் 2 பேரையும் பலத்த பாதுகாப்புடன் கேரளா அழைத்து சென்றனர். டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார்  அவர்களுடன் பாதுகாப்புக்கு சென்றனர். கியூ பிரிவு போலீசாரும் உடன் சென்றிருந்தனர்.

தீவிரவாதிகள் கடைசியாக எர்ணாகுளத்தில் உள்ள கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கழிவுநீர் ஓடையில் துப்பாக்கியை வீசியதாக கூறியுள்ளனர். அந்த கழிவுநீர் ஓடை பகுதிக்கு அழைத்து செல்லப்பட்ட அப்துல்சமீம், தவுபிக்  ஆகியோர் துப்பாக்கியை வீசிய இடத்தை அடையாளம் காட்டிய நிலையில் அந்த இடத்தில் கொச்சி மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் குமரி மாவட்ட போலீசார் தேடுதல் நடத்தினர். அப்போது துப்பாக்கி ஒன்று அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டது.  அது இத்தாலி தயாரிப்பு பிஸ்டல் ஆகும். அதில் 5 குண்டுகள் மீதம் இருந்தன. ஏற்கனவே 5 குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. எனவே இந்த துப்பாக்கி எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட  விசாரணையில் போலீசார் உறுதி செய்தனர். அதே வேளையில் இந்த துப்பாக்கி ராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கி எனவும், அதில் ‘ஒன்லி பார் ஆர்மி யூசேஜ்’ என குறிப்பிடப்பட்டுள்ளதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ பயன்பாடு  துப்பாக்கி தீவிரவாதிகள் கைவசம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிதான் வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பதை உறுதி செய்ய மேலும் பரிசோதனைகள் நடத்த வேண்டி  வரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலை நடத்திய பின்னர் தீவிரவாதிகள் இருவரும் திருவனந்தபுரத்தில் இருந்து பஸ்சில் எர்ணாகுளம் சென்றுள்ளனர். அங்கு காலையில் செய்திதாள்களை பார்த்துள்ளனர். அப்போது அதில் துப்பாக்கியால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட  தகவல் வெளியாகியிருந்ததை பார்த்துவிட்டு அங்கிருந்த ஓடையில் துப்பாக்கியை வீசிவிட்டு சென்றுள்ளதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி கைப்பற்றப்பட்ட நிலையில் அவர்கள் மீண்டும் குமரி மாவட்டம்  அழைத்துவரப்பட்டனர். ஏற்கனவே இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட அல் உம்மா தலைவன் மெகபூப்பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரின் தீவிரவாத  தொடர்புகள் உறுதி செய்யப்பட்டன. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்   வழக்கில் முக்கிய அடையாளமான துப்பாக்கி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Terrorists ,murder ,SSI Wilson ,Kaliyakavili ,
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...