×

மூடப்பட்ட ரயில்வே தபால் நிலையத்தை திறக்க கோரி எம்பியிடம் மனு

கடலூர், ஜன. 24: விரைவான அஞ்சல் சேவைக்காக ரயில்வே துறையுடன் இணைந்து அஞ்சல் துறை ஆர்எம்எஸ்களை இயக்கி வருகிறது. இவைகள் பெரும்பாலும் ரயில் நிலையங்களின் அருகிலேயே செயல்பட்டு வரும். மாலை 3 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் (சில இடங்களில் 24 மணி நேரமும்) செயல்படும் இந்த ஆர்எம்எஸ்களில் விரைவு அஞ்சல் புக்கிங் வசதியும் உள்ளது. இந்நிலையில், மாவட்ட தலைநகராக விளங்கும் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஆர்எம்எஸ் நிலையம் மற்றும் சிதம்பரத்திலுள்ள நிலையங்களை கடந்தாண்டில் மூடி விட்டு விருத்தாசலத்துடன் இணைக்கும் பணியை அஞ்சல்துறை மேற்கொண்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் திருப்பாதிரிப்புலியூர் ஆர்எம்எஸ் மூடப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், திருவண்ணாமலை, அரியலூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆர்எம்எஸ்கள் கடந்த 20ம் தேதி முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி   மூடப்பட்டன.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆர்எம்எஸ் மூடப்பட்டதால் அஞ்சல் சேவையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பொது மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, திருப்பாதிரிப்புலியூர் ஆர்எம்எஸ்சை மீண்டும் திறக்க வேண்டும் அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி கடலூர் அனைத்து பொது நல இயக்க கூட்டமைப்பினர்  கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷிடம் மனு அளித்தனர். கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  வெண்புறா குமார் தலைமையில், மக்கள் அதிகாரம் மண்டல அமைப்பாளர் பாலு,  ராமலிங்கம், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் கஜேந்திரன் முன்னிலையில் மனு அளித்தனர். வெண்புறா பொதுநல பேரவை தலைவர் சண்முகம், தமிழர் கழகம் மாவட்ட தலைவர் பரிதிவாணன், பேருந்து நிலைய சிறு வியாபாரிகள் சங்க தலைவர் சுகுமார், அச்சம் தவிர் நுகர்வோர் இயக்கம் கஞ்சமலை, கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்