×

விடுதியில் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்

திருவண்ணாமலை, ஜன.24: திருவண்ணாமலையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள், விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை- வேட்டவலம் சாலை வசந்தம் நகரில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 50 பேர் தங்கி பயின்று வருகின்றனர். இங்கு அந்தோணிராஜ் என்பவர் வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், விடுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை, உணவும் தரமானதாக இல்லையென வார்டனிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று காலை விடுதி எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விரைந்து வந்து, மறியல் செய்த மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில், மறியலை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், `விடுதியில் கழிவறை வசதி இல்லை. உணவும் தரமாக வழங்குவது கிடையாது. விடுதி வளாகத்தில் புதர் மண்டி கிடப்பதால், இரவு நேரத்தில் விஷ ஜந்துக்கள் உள்ளே வருகிறது. இதனால் அச்சத்தில் இருந்து வருகிறோம். இதுகுறித்து வார்டனிடம் தெரிவித்து வந்தோம், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டிருந்தபோது, விடுதியில் மின்விசிறி திடீரென உடைத்து கீழே விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். விடுதியை முறையாக பராமரிப்பது கிடையாது. சம்பந்தப்பட்ட அதிகாரியும் ஆய்வு மேற்கொள்வதில்லை. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளிக்க உள்ளோம்' என்றனர்.

Tags : State college students ,road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...