×

ஊரக பகுதிகளில் மக்களிடம் நடுநிலையுடன் செயல்பட்டு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுங்கள்

திருப்பூர்,  ஜன.23: திருப்பூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில்  ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான ஒருநாள் அறிமுக  பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள திருப்பூர்,  ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், பல்லடம், வெள்ளக்கோவில், மூலனூர்,  அவிநாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை மற்றும்  மடத்துக்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 265 கிராம ஊராட்சிகளுக்கு  நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஊராட்சித்தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் பங்கேற்றனர். பயிற்சி  கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்த  பயிற்சி முகாமில், கிராம ஊராட்சி அமைப்புகள், கிராம ஊராட்சி  நிர்வாகத்திற்கு வரையறை செய்யப்பட்டுள்ள முக்கிய கூறுகள், ஊராட்சி மன்ற  கூட்டம் தொடர்பாகவும், கூட்டங்களின் வகைகள் பற்றியும், பயணப்படி,  அமர்வுப்படி பற்றியும், கிராம ஊராட்சிக்கான கடமைகள், பொறுப்புகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

ேமலும் ஊராட்சி மன்ற தலைவருக்கான அதிகாரங்கள் பற்றியும், மனைப்பிரிவுகளுக்கு  அங்கீகாரம் வழங்குதல், கிராம ஊராட்சி நிலைக்குழுக்கள், நிதி நிர்வாக நடைமுறை, நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப  அனுமதி, கைப்பம்பு, விசைப்பம்பு, தெருவிளக்கு பராமரிப்பு, ஊராட்சி மின் கட்டணம், குடிநீர் விநியோகம்,  திடக்கழிவு மேலாண்மை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பாரத  பிரதமர் குடியிருப்புத்திட்டம், தூய்மை பாரத இயக்கம், முதலமைச்சரின் சூரிய  மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், பயன்பாடு இல்லாத திறந்த வெளி  கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் தொடர்பாகவும் மற்றும் கிராம ஊராட்சி  வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பயிற்சிகள்  வழங்கப்பட்டது.
இவற்றை கிராம ஊராட்சித்தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள்  நல்ல முறையில் அறிந்து கொண்டு நேர்மையாகவும், நடுநிலையுடனும் செயல்பட்டு  பொதுமக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் முழுமையாக நிறைவேற்றி, கிராம  ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு தங்களது பங்கினை முழுமையாக ஆற்ற வேண்டுமென  மாவட்ட கலெக்டர் கூறினார்.

இந்த பயிற்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், திட்ட இயக்குநர் கோமகன்  (மகளிர் திட்டம்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், ஊரக  வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சேகர், மாவட்ட ஊராட்சி செயலர்  லட்சுமணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : areas ,facilities ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...