×

சத்தி பஸ் நிலையம் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

சத்தியமங்கலம், ஜன.23: சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு நிலம் தேர்வு செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.55 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. சத்தியமங்கலம் நகரின் மையப்பகுதியில் ஓடும் பவானி ஆற்றிற்கு வடக்குப்பகுதியில் உள்ள கோட்டுவீராம்பாளையம், பழைய மார்க்கெட், வடக்குப்பேட்டை, ராஜீவ்நகர், அக்ரஹாரம், ஐயப்பன்கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழி தோண்டி பைப்லைன் பதிக்கும் பணிகள் முடிந்தது.பவானி ஆற்றின் தெற்குப்பகுதியில் உள்ள திருநகர் காலனி, எஸ்.ஆர்.டி.கார்னர், ரங்கசமுத்திரம், புதிய பஸ் நிலையம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கவில்லை.

இந்நிலையில், சத்தியமங்கலம் பஸ் நிலையத்திற்கு தெற்குப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்த போது அப்பகுதி பொதுமக்கள் இந்த இடத்தை பொது மயான உபயோகத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும், இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்ததால் இடம் தேர்வு செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 30 சென்ட் பொது மயானம் அமைக்க பயன்படுத்திக் கொள்ளவும், மீதமுள்ள இடத்தில் பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, நேற்று அந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி முட்புதர் அகற்றும் பணி நடந்தது. இதையறிந்த அண்ணாநகர், திம்மையன்புதூர், ரங்கசமுத்திரம் பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மயான பகுதியில் பணிகள் மேற்கொள்ளக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி ஆணையாளர் அமுதா மற்றும் சத்தியமங்கலம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்காலிகமாக இடம் சுத்தம் செய்யும் பணி மட்டுமே நடைபெறுவதாகவும், பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை இங்கு அமைப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து முட்புதர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது.

Tags : refinery ,bus stand ,Sathi ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி