×

மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு குண்டாற்று தரைப்பாலத்தை வாகனங்கள் கடப்பதில் சிக்கல்


மேம்பாலம் அமைக்க கோரிக்கை
திருச்சுழி, ஜன. 23: திருச்சுழி அருகே உடையானம்பட்டி செல்லும் சாலையில் குண்டாற்றின் குறுக்கே, மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழியிலிருந்து உடையனம்பட்டிக்கு செல்லும் சாலையில், குண்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த சாலை வழியாக உடையானம்பட்டி, உடைகுளம், தாமரைக்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தரைப்பாலத்தை கடக்க முடியாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். மழை பெய்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படுகிறது. இந்த சமயங்களில் சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.

மேலும், மழை காலங்களில் உடையானம்பட்டி, உடைகுளம், தாமரைகுளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பல கி.மீ., தூரம் சுற்றி செல்கின்றனர். எனவே, தரைப்பாலத்தை அகற்றி மேம்பாலம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ‘உடையானம்பட்டி பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களிலிருந்து திருச்சுழி, காரியபட்டி, அருப்புக்கோட்டை உட்பட பல ஊர்களுக்கு படிக்க செல்கிறோம். அப்போது குண்டாற்றில் உள்ள தரைப்பாலத்தை கடந்த செல்ல வேண்டியுள்ளது. மழை காலங்களில் குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது  தரைப்பாலத்தை கடக்க முடியாமல், பல கி.மீ கடந்து பள்ளிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே. இப்பகுதி மக்களின் நலன் கருதி மேப்பாலம் கட்ட வேண்டும்’ என கூறினர்.

Tags : flooding ,rains ,
× RELATED திடீர் மழையால் கயத்தாறில் 3 டன் மக்காச்சோளம் சேதம்: விவசாயிகள் கவலை