×

ஊராட்சி தலைவர்கள் விருப்பு, வெறுப்பின்றி செயல்பட வேண்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அட்வைஸ்

விருதுநகர், ஜன. 23: புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சி தலைவர், துணைத்தலைவர்கள் விருப்பு, வெறுப்பின்றி இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவுரை தெரிவித்தார்.
விருதுநகரில் விருதுநகர், சிவகாசி ஒன்றியங்களைச் சேர்ந்த 112 கிராம ஊராட்சிகளின் தலைவர், உபதலைவர் ஆகியோருக்கு வாடியான் மாதாகோவில் மண்டபத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர், துணைத்தலைவர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு கலெக்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், தேர்தலில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் இல்லை. மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர். மக்களின் பிரதிநிதிகளாக உங்களை பார்க்கிறோம். 2019-20க்கு 12,524 ஊராட்சிகளுக்கு ரூ.6,578 நிதி ஒதுக்கப்பட்ட வந்து கொண்டு இருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருந்தாலும் தேவை அதிகம் இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில்தான் நிதி ஒதுக்கப்படும். கட்சி பாகுபாடு இன்றி திட்ட ஒதுக்கீடு செய்து கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம். ஊராட்சி தலைவர்கள் கடமை உணர்வோடு அனைத்து கவுன்சிலர்களை அரவணைத்து செயல்பட வேண்டும். தலைவர், துணைத்தலைவர்கள் இணைந்து செயல்பட வேண்டும். கிராம ஊராட்சிகளுக்கு தேவையான நிதியை மத்திய,மாநில அரசுகள் தயாராக உள்ளது. பிரதமர், அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் நினைக்கின்ற திட்டங்களை அடித்தட்டு கிராம மக்களுக்கு கொண்டு சேர்க்கிற பதவி கிராம ஊராட்சி தலைவர் பதவி. அனைவரும் விருப்பு, வெறுப்பு இன்றி செயல்பட வேண்டும் என தெரிவித்தார். அதை தொடர்ந்து ஒவ்வொரு ஊராட்சி தலைவர், துணைத்தலைவருடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் விஷ்ணுபரன், திட்ட இயக்குநர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் விருதுநகர் ஜே.பி ரெசிடென்சி மண்டபத்தில் காரியாபட்டி, ராஜபாளையம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 112 கிராம ஊராட்சி தலைவர், உபதலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இன்று (ஜன.23) விருதுநகரில் வெம்பக்கோட்டை, நரிக்குடி, வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, சாத்து£ர், திருவில்லிபுத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 226 கிராம ஊராட்சிகளின் தலைவர், உபதலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Tags : Rajendra Balaji ,panchayat leaders ,
× RELATED கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம்...