சாத்தூர்-சிவகாசி மார்க்கத்தில் குண்டும், குழியுமான சாலை 10 ஆண்டாக பராமரிப்பு இல்லை: வாகன ஓட்டிகள் அவதி

சாத்தூர், ஜன. 23: சாத்தூரிலிருந்து சிவகாசிக்கு செல்லும் சாலை 10 ஆண்டாக பராமரிப்பு இல்லாததால் குண்டும், குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் வீரபாண்டியபுரம், மேட்டமலை, சின்னக்காமன்பட்டி, கோனாம்பட்டி, அனுப்பங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. மேலும், இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை உள்ளன. இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பள்ளம், மேடு தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்கக்கோரி, பல்வேறு அமைப்பினர், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் வாகன ஒட்டுநர்கள் நெடுஞ்சாலைத்துறையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சாத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,motorists ,Sattur-Sivakasi ,
× RELATED சாலை விதி விழிப்புணர்வை கண்டறிய...