×

கந்து வட்டிக் கும்பல் அட்டூழியம்

தேனி, ஜன. 23:தேனியில் கந்துவட்டிக்கும்பல்களின் அட்டகாசத்தால், ஏழைக்குடும்பங்கள் கடன் மற்றும் வட்டிச்சுமையில் சிக்கி தங்களது சொத்துக்களை இழந்து வெளியேறி வருகின்றனர். தேனியில் கந்துவட்டிக் கும்பல்களின் அட்டகாசம் வரம்பினை மீறி நடந்து வருகிறது. 100 ரூபாய்க்கு 12 மணி நேரத்திற்கு 10 ரூபாய் வட்டி வசூலிக்கின்றனர். ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுத்தால் 75 ஆயிரம் ரூபாய் வட்டியினை முதலிலேயே எடுத்துக் கொள்கின்றனர். கடன்பட்டவர் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு கடன் கட்ட வேண்டும். அவர்களது ஏ.டி.எம்., கார்டு, பான்கார்டு, ரேஷன் கார்டுகளை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மாதந்தோறும் 10 ஆயிரம் குறிப்பிட்ட தேதியில் கட்ட தவறினால் அவர்களிடம் கூடுதல் வட்டி வசூலிக்கின்றனர்.

அதேபோல் கந்துவட்டி, மீட்டர் வட்டி, வட்டிக்கு வட்டி என இக்கும்பல்களின் அட்டகாசம் பெருகி வருகிறது. 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி விட்டு ஒரு லட்சம் ரூபாய் வட்டி கட்டிய பின்னரும், அந்த 10 ஆயிரம் ரூபாய்க்காக வீடு தேடிச் சென்று பாத்திரங்களை கைப்பற்றியும், வீட்டை பூட்டியும் கடன் பட்டவர்களை அவமதிக்கின்றனர். கடன் சுமையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. தேனி உழவர்சந்தைக்கு உள்ளேயே வந்து தினமும் கந்து வட்டி வசூலிப்பவர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களை அதிகாரிகள் சந்தைக்குள் ஏன் அனுமதிக்கின்றனர் என்பது தெரியவில்லை. கந்துவட்டிக்கும்பல் குறித்து போலீசிடம் புகார் சொன்னால் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக கடன் பட்டவர்களையே மிரட்டுகின்றனர். இதனால் போலீசுக்கும் செல்ல வழியில்லை. இந்த பிரச்னைகளால் ஏழை கூலி தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவர்களை பிழிந்து எடுக்கும் கந்துவட்டிக்கும்பலை ஒழிக்க தேனி எஸ்.பி. இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...