×

புதிய அறிவிப்பால் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சம்பளம், பணப்பலன் பெறுவதில் சிக்கல் ஆசிரியர்கள், ஊழியர்கள் அவதி

சிவகங்கை, ஜன. 23: சம்பளம் உள்ளிட்ட பணப்பயன்கள் கிடைப்பதில் கருவூலத்துறையின் புதிய அறிவிப்பால் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கருவூலம் மூலம் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு மாத ஊதியம் மற்றும் பணப்பலன்களுக்கான பில்கள் தயார் செய்யப்பட்டு பள்ளி செயலர் கையொப்பத்துடன் பில் மற்றும் சிடி காப்பியுடன் கருவூலத்தில் வழங்கப்படும். பின்னர் அவரவர் வங்கி கணக்கில் ஊதியம் மற்றும் பணப்பலன்கள் வரவு வைக்கப்படும்.

இந்நிலையில் தற்போது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் மூலம் ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்படி பில்கள் அனைத்தும் காகிதங்கள் மற்றும் சிடி மூலம் இல்லாமல் நேரடியாக ஆன்லைன் மூலமே அனுப்பப்படும். ஆனால் தற்போது இத்திட்டம் பரிசோதனை அளவிலேயே இருக்கிறது. இதுகுறித்து அரசு உதவிபெறும் பள்ளி பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை. ஆனால் இம்மாதம் ஊதியம் மற்றும் பணப்பலன்களுக்கான பில்கள் கருவூலத்தில் வழங்கும் போது பில்கள் அனைத்தும் காகிதங்கள் மற்றும் சிடி மட்டுமின்றி ஆன்லைன் மூலமும் வழங்க வேண்டும் என கருவூலத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் ஊதியம் மற்றும் பணப்பலன்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ‘பில்கள் அனைத்தும் காகிதங்கள் மற்றும் சிடி மூலம் இல்லாமல் நேரடியாக ஆன்லைன் மூலமே வழங்கப்படும் திட்டம் இனிவரும் காலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால் இம்மாதமே ஆன்லைன் பில் கேட்கின்றனர். இதை காரணம் காட்டி இம்மாதத்திற்கான பில் வாங்கப்படவில்லை. எங்களுக்கு இதுகுறித்து எவ்வித பயிற்சியும் இல்லை. பள்ளியில் தேவையான உபகரணங்களும் இல்லை. முறையான பயிற்சி, கால அவகாசம் வழங்காமல் கருவூலத்துறையினர் இதுபோல் கூறுகின்றனர். இம்மாத ஊதியத்தை தாமதப்படுத்த இதுபோல் செய்கின்றனர். இதனால் தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருவூலத்துறைக்கு அரசு உத்தரவிட்டு ஆன்லைன் பில்கள் அனுப்ப தேவையான கால அவகாசம் வழங்கவும், முந்தைய முறைப்படி ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Teachers ,announcement ,schools ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...