×

குவியும் குறைதீர் கோரிக்கை மனுக்கள்

சிவகங்கை, ஜன.23: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில் வாரந்தோறும் மனுக்கள் குவிந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தாலுகா தலைநகரங்களில் தாலுகா அலுவலகங்கள், ஒன்றிய தலைநகரங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளது. தற்போது ஊராட்சி அளவில் அவ்வப்போது முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதியோர், விதவை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை, ரேசன் கார்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. மேலும் சிறப்பு முகாம்களும் ஒவ்வொரு தாலுகா அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு முகாம்களில் பொதுமக்களுடைய கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டாலும் வாரந்தோறும் திங்கள் கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறை தீர் கூட்டத்திற்கு ஏராளமான கிராமத்தினர் வருகின்றனர். காலை 10 மணியிலிருந்து மதியம் வரை சுமார் 300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது.
இதில் குடிநீர், சாலை வசதி, அரசு மற்றும் தனியார் இடம் ஆக்கிரமிப்பு, கால்வாய் ஆக்கிரமிப்பு, சுடுகாடு வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளுடன் பொதுமக்கள் மனு அளிக்கின்றனர்.

கிராம மக்களே அதிகமாக மனு அளிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் வரை சம்பிரதாயமாக நடந்த மனு வாங்கும் நிகழ்வுகளில் தற்போது பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மனு அளித்ததற்கான ரசீது பெறுவது, மனு அளித்து குறிப்பிட்ட நாள் வரை மனுவில் கொடுக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில் மீண்டும் கூடுதல் மனு அளிப்பது, முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பவது என அடுத்த கட்ட நடவடிக்கைகளை மனுதாரர்கள் செய்ய தொடங்குகின்றனர். மனு தாரர்கள் கூறியதாவது:கோரிக்கைககளை வலியுறுத்தி நேரடியாகவோ, மனுவாகவோ சம்பந்தப்பட்டவர்களிடம் அளித்தால் தீர்வு ஏற்படுவதில்லை. கலெக்டரிடம் அளிக்கப்பட்டு மனு சம்பந்தப்பட்ட துறைக்கு வரும்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. முன்பெல்லாம் கலெக்டர் அலுவலகம் வருவது என்பதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. தற்போது நேரடியாக மனு அளிக்க முடிவதால் கிராமத்தினர் ஏராளமானோர் வருகிறோம் என்றனர்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்