×

அயோடின் கலக்காத உப்பு விற்பனை தடுக்க கலெக்டருக்கு கோரிக்கை

கீழக்கரை, ஜன.23:  வரும் ஜனவரி 26ல் நடைபெறும் அனைத்து கிராம சபை கூட்டங்களிலும் மக்களின் பொது நலனை கருதி உணவு பாதுகாப்பு சட்டப்படி அயோடின் கலக்காத உப்பை விற்பனை செய்வதை தடுக்கும் விதத்தில் தீர்மானம் நிறைவேற்ற கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் சார்பில் கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழக்கரை நுகர்வோர் நலச் சங்க செயலாளர் செய்யது இபுராகிம் கூறுகையில், அயோடின் நுண்சத்து குறைவினால் முன்கழுத்து நோய் (தைராய்டு) மற்றும் கருசிதைவு, குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைதல் போன்ற நோய்கள் வருகிறது. இதைத் தடுக்கும் விதத்தில் தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை, உணவு பாதுகாப்புத் துறை மூலம் நுகர்வோர் நலச்சங்கமும் இணைந்து கடந்த 10 வருடங்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் உப்பு உற்பத்தியில் 2ம் இடம் வகிக்கும் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, வேதாரண்யம் பகுதி உப்பு உற்பத்தியாளர்கள் பதப்படுத்தப்பட்ட உப்பு என்ற பெயரில் அச்சிட்டு பெரும் அளவிலான கிராம மக்களை இலக்காக கொண்டு உப்பு விற்பனையை செய்து வருகின்றனர். இதனால் உணவு பயன்பாடு இல்லாத உப்பை உணவு பாதுகாப்புத்துறை கண்காணிப்பு மற்றும் மாதிரி எடுக்க இயலாத நிலை உருவாகி மத்திய, மாநில அரசின் அயோடின் பற்றாக்குறை குறைபாடுகளை தடுக்கும் நடவடிக்கை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. பதப்படுத்தும் உப்பு விற்பனையை தடுத்தால் மட்டுமே அரசின் திட்டப்படி அயோடின் பற்றாக்குறை குறைபாடுகளை முழுவதுமாக இலக்கை அடைய முடியும் என்ற அடிப்படையில் வரும் ஜன.26ல் நடைபெறும் அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் அயோடின் நுண்சத்து குறித்தும் பதப்படுத்தும் உப்பை விற்பனை செய்ய தடை விதிக்கவும் கிராமசபையின் வலிமையுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனு அனுப்பியுள்ளோம் என்றார்.

Tags : sale ,Collector ,
× RELATED ₹3.63 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்