×

தண்ணீர் தேடி வரும்போது விபத்தில் சிக்கி உயிர்விடும் மான்கள் காப்பகம் அமைக்க வலியுறுத்தல்

சாயல்குடி, ஜன.23:  கடலாடி மற்றும் முதுகுளத்தூர் பகுதியில் தண்ணீரை தேடி வரும் மான்கள் விபத்தில் சிக்கி இறப்பதை தடுக்க, மான் காப்பகம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி பகுதியிலுள்ள நரிப்பையூர், ஒப்பிலான், ஏர்வாடி இதம்பாடல், போன்ற கடற்கரை காடுகளிலும், கடலாடி, ஆப்பனூர், கிடாத்திருக்கை, மலட்டாறு முக்குரோடு, கோவிலாங்குளம், கொம்பூதி. முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி, பேரையூர் போன்ற பகுதிகளில் உள்ள காடுகளிலும் அதிகளவில் மான்கள் கூட்டமாக வாழ்ந்து வருகிறது. இப்பகுதியில் கடந்த காலத்தில் தொடர்ந்து வறட்சி நிலவி வந்தது. இதனால் மான்களின் இனப்பெருக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நல்ல மழை பெய்து வந்தது. இதனால் இப்பகுதியிலுள்ள நீர் நிலைகளில் தண்ணீர் பெருகி கிடக்கிறது. இதனால் மான்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தண்ணீர் தேடி மான்கள் கூட்டம், கூட்டமாக வருகிறது. கிராமங்களுக்கு வெளிப்புறம் பகுதிகளுக்கு வரும்போது நாய்கள் கடித்து குதறியும், சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதும் அடிக்கடி நிகழ்கிறது.

ஆற்று கரையோரங்களில் சோளம், கம்பு போன்ற சிறுதானியங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அவை தற்போது நன்கு வளர்ந்து கதிர்விட்டு மகசூல் நிலையை எட்டியுள்ளது. இதனால் இவற்றை மேய மான்கள் வருவதால், விவசாயம் பாதிக்கப்பட்டு விடும் என கருதி சில இடங்களில் குருணை மருந்து வைத்து வருகின்றனர். இதனை சாப்பிட்டு மான்கள் சாகும் அபாயம் உள்ளது. மேலும் சமூக விரோத கும்பல், காட்டு பகுதிக்குள் தண்ணீர் குடிக்க வரும் மான்களை வலைவிரித்து பிடித்து மறைமுகமாக இறைச்சிக்காக பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே மான்களை காப்பாற்ற மலட்டாறு பகுதிகளில் மான் காப்பகம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை