×

30ம் தேதி வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தல் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி ஜெயிக்க போவது யார்?

மதுரை, ஜன.23: வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் தேர்தல் 30ம் தேதி நடக்க இருப்பதால் திமுக, அதிமுக இடையே  கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜெயிக்க போவது யார் என்பது பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
 மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 11ம் தேதி தலைவர் தேர்தல்  நடைபெற்றது. இதில் மதுரை கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சேடப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் திமுக வெற்றி பெற்றது. திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, செல்லம்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி ஆகிய 6 ஒன்றியங்களில் அதிமுக வெற்றிபெற்று பதவியேற்றுக்கொண்டனர். மதுரை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றிய நிலையில் ஒன்றிய தலைவர் பதவி சம எண்ணிக்கையில் பிடித்துள்ளது. வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தல் கடந்த 11ம் தேதி நடத்த முடியாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த ஒன்றியத்தில் மொத்தம் 14 கவுன்சிலர்கள் இருப்பதால் தலைவர் தேர்தலில் 8 பேர் பங்கேற்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும் ஒரு சுயேச்சை கவுன்சிலர் உள்பட 7 பேர் மட்டுமே பங்கேற்றதால், தேர்தல் நடத்த கோரமில்லை என்று தேர்தலை அதிகாரி ஒத்திவைத்தார். இதைத்தொடர்ந்து துணைத்தலைவர் தேர்தலும் தள்ளிவைக்கப்பட்டது.

மொத்தமுள்ள 14 கவுன்சில் வார்டுகளில் திமுக 6 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றது. இதில் சுயேச்சைக்கு துணைத் தலைவர் பதவி உள்ளிட்ட பேரம் பேசி அதிமுக பக்கம் இழுத்ததாக கூறப்படுகிறது. இந்த பேரம் அதிமுகவிலுள்ள ஒரு கவுன்சிலருக்கு அதிருப்தியை உருவாக்கியதாக தெரிகிறது. இதனால் 11ம் தேதி தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தார். தேர்தலில் அதிமுக கவுன்சிலர் 6 பேர், சுயேச்சை ஒருவர் சேர்த்து மொத்தம் 7 பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த தேர்தலில் முறைகேடு அரங்கேறிவிடும் என்று கருதியதால் திமுக கவுன்சிலர்களும் பங்கேற்கவில்லை. இந்த பின்னணியில் தான் தேர்தல் நடத்த முடியாமல் தள்ளி போனது. இந்த சூழலில் அதிமுக கவுன்சிலர்களில் ஏற்கனவே ஒருவர் அதிருப்தியுடன் தேர்தலை புறக்கணித்த நிலையில் மேலும் ஒருவர் அதிருப்தி அடைந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாம். மதில் மேல் பூனை நிலையில் யாராவது இருக்கிறார்களா என்ற கண்காணிப்பும் இரவு, பகலாக நடக்கிறது. இதனால் அதிமுக கவுன்சிலர்களிடம் சமாதான பேச்சு நடத்தி சமாளிக்கும் முயற்சி தீவிரமாக நடக்கிறது. இந்த முயற்சி பலிக்குமா என்பது கேள்விக் குறியாக நீடிக்கிறது. இந்த சூழலில் வரும் 30ம் தேதி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி உருவாகி உள்ளது. இந்த தேர்தல் முடிவு வாடிப்பட்டி ஒன்றியம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : rivalry ,DMK ,AIADMK ,
× RELATED DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில்...