×

பழநியில் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்ட டிரைவர் சென்னை பஸ்சை இயக்கினார் பயணிகள் போராட்டத்தால் பரபரப்பு

பழநி, ஜன. 23: பழநியில் செல்போன் பார்த்தபடியே பஸ் ஓட்டியதால் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்ட டிரைவர், சென்னை பஸ்சை ஓட்டிய நிலையில் பயணிகள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழநியில் இருந்து திண்டுக்கல் செல்லும் தனியார் பஸ்சின் டிரைவராக இருந்தவர் ராமகிருஷ்ணன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் செல்போனை பார்த்தபடியே சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக பஸ்சை ஓட்டினார். அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் டிரைவரின் இச்செயலை செல்போனில் பதிவு செய்துள்ளார்.  அந்த வீடியோ பதிவு வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில்  வேகமாக பரவியது. இதன் காரணமாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ராமகிருஷ்ணனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு சென்னை செல்லும் ஆம்னி பஸ்சை ராமகிருஷ்ணன் ஓட்டி வந்துள்ளார். உஷாரடைந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் ராமகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் எவ்வாறு பஸ் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாற்று டிரைவர் உரிய சீருடையின்றி சென்னை செல்லும் ஆம்னி பஸ்சை ஓட்டிச் சென்றார். ராமகிருஷ்ணன் பஸ்சின் பின்பகுதிக்கு சென்று விட்டார். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பஸ்சின் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chennai ,
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...