×

5 ஒன்றியங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர்களுக்கான பயிற்சி முகாம்

சேலம், ஜன.23: சேலம் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் இரு கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில், போட்டியிட்டு வெற்றிபெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் கடந்த 6ம் தேதியும், துணைத் தலைவர்கள் கடந்த 11ம் தேதி நடந்த மறைமுக தேர்தலுக்கு பிறகும் பொறுப்பேற்றுக்கொண்டனர். தொடர்ந்து இவர்களுக்கான பயிற்சி முகாம் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தின் புதிய பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

ஏற்காடு மெயின்ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த பயிற்சி முகாமை, ஊராட்சிகள் உதவி இயக்குநர் கோபிநாத் தொடங்கி வைத்தார். இதில், அயோத்தியாபட்டணம், பனமரத்துப்பட்டி, ஏற்காடு, வாழப்பாடி மற்றும் பெத்தநாய்க்கன்பாளையம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர். உதவி நிரலர் ராஜாமணி, முதன்மை பயிற்றுநர் பத்மநாபன், பிடிஓக்கள் ராமசந்தர், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு, பயிற்சி அளித்தனர். அப்போது, ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்களின் கடமைகள் என்னென்ன? நிதி மேலாண்மை, அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags : Training Camp ,President ,Unions ,Union ,Vice Presidents ,
× RELATED ஹர்திக் நியமனம் பேசும் பொருளானாலும்...