×

சேந்தமங்கலம் அருகே விவசாய நிலங்களில் தேங்கிய கழிவுநீரால் பயிர்கள் பாதிப்பு

சேந்தமங்கலம்,  ஜன.23: சேந்தமங்கலம் அருகே கால்வாய் தூர்ந்து போனதால் குளத்துக்கு  செல்லும் சாக்கடை கழிவுநீர், விளை நிலங்களில் தேங்கி பயிர்கள்  சேதமடைந்துள்ளது. எனவே, இந்த கால்வாயை தூர்வார வேண்டும்  என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேந்தமங்கலம்  அடுத்துள்ள திருநகர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தமிழக சுகாதாரத்துறை  செயலருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் அடுத்த  வேட்டாம்பாடி கிராமத்தில், நகரின் கழிவுநீர்  முழுவதும் கொசவம்பட்டி குளத்துக்கு வந்து, அதிலிருந்து கழிவுநீர் செல்லும்  கால்வாய் (வெள்ளவாரி) வழியாக வேட்டாம்பாடி குளத்துக்கு செல்கிறது. தற்போது மழைநீர் கலந்த கழிவுநீர் செல்லும் கால்வாய்  தூர்ந்துபோய் விட்டது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி, விவசாய நிலங்களில்  குளம் போல் தேங்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன.

எதிர்காலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ரயில்வே குடியிருப்பு,  எம்.ஜி.ஆர் நகர், காமராஜர் நகர், கூச்சிக்கல்புதூர், செல்லப்பா காலனி,  ஓட்டக்குளம் புதூர், வீசாணம் போன்ற பகுதிகளில் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலனை  கருத்தில் கொண்டு, கால்வாயை தூர்வாரி கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags : lands ,Sendhamangalam ,
× RELATED 5 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்