×

கொள்ளை முயற்சி எதிரொலி அனைத்து வங்கிகளிலும் கண்காணிப்பு கேமரா

தர்மபுரி, ஜன.23: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வங்கியில் கொள்ளை முயற்சி சம்பவத்தைத் தொடர்ந்து, தர்மபுரியில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நலன் கருதி வங்கி அதிகாரிகளின் சிறப்பு ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி தலைமையில் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் மர்ம கொள்ளை கும்பல் கேஸ் சிலிண்டர் வெல்டிங் பொருட்கள் கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் நகை, பணம் கொள்ளை போகவில்லை. வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். ஏற்கனவே, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி  24ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அருகே ராமபுரத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் வடமாநில கொள்ளையர்கள் புகுந்து 6 ஆயிரம் (₹12 கோடி) பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

அஞ்செட்டி பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கொள்ளை முயற்சி சம்பத்தைத் தொடர்ந்து, தர்மபுரி டிஎஸ்பி உட்கோட்டத்திற்கு உட்பட்ட வங்கிகளுக்கான மேலாளர் மற்றும் வங்கி அதிகாரிகளை அழைத்து அவசரமாக சிறப்பு ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையில் நடந்தது. ஏஎஸ்பி சமேசிங் மீனா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கி, கிராமப்புற வங்கி, தனியார் வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தர்மபுரி டிஎஸ்பி ராஜ்குமார் பேசுகையில், ‘வங்கிகளில் கட்டாயமாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். இரவு காவலாளியை நியமிக்க வேண்டும். காவலாளியின் ஆதார் உள்ளிட்ட முக்கிய அடையாள அட்டைகளை சேகரித்து, முகவரியில் சென்று விசாரித்து, நம்பிக்கையான, ஆரோக்கியமான நபர்களை நியமிக்க வேண்டும். வங்கியை சுற்றி இருள் சூழாதவாறு மின்விளக்கு பொருத்த வேண்டும். வங்கியில் அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் அல்லது போலீசார் வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தால் உடனே வங்கிக்கு வந்து மேலாளர் சோதனை செய்ய வேண்டும். வங்கியில் அதிக பணம் எடுத்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கு திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவம் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வங்கிக்கு அல்லது வங்கி அருகே சந்தேகப்படும் நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனே காவல்துறை தகவல் கொடுக்க வேண்டும்,’ என்றார்.

Tags : banks ,
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்