×

கிராம கோயில் பூஜாரிகள் ஓய்வூதியம் பெற வருமான உச்சவரம்பு உயர்த்த கோரிக்கை


நெல்லை, ஜன. 23:  கிராம கோயில் பூஜாரிகளுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்றும், இதற்கான வருமான உச்சவரம்பை ரூ.24 ஆயிரத்திலிருந்து 72 ஆயிரமாக உயர்த்த வேண்டுமென்றும் நெல்லையில் நடந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் நெல்லை மாவட்ட மாநாடு பாளை நேருஜி கலையரங்கில் நேற்று நடந்தது. மண்டல அமைப்பாளர் சேரகுளம் மாரியப்பன் வரவேற்றார். பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் அறிமுக உரையாற்றினார். இதில் திருக்குறுங்குடி ஜீயர் மடம் ராமானுஜ ஜீயர் சுவாமி, ஆழ்வார்குறிச்சி ஜீயர் மடம் எம்பெருமானார் ரெங்க ராமானுஜ ஜீயர் சுவாமி, பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமி, கன்னியாகுமரி வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரமம் புத்தாத்மானந்தா சரஸ்வதி சுவாமி பேசினர். விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் ரெத்தினசாமி, மாநில செயல் தலைவர் செல்லமுத்து, மாவட்ட தலைவர் ஆவுடையப்பன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், கிராம பூஜாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் கண்ணன், மாவட்ட இணை அமைப்பாளர்கள் ஞானக்குட்டி, கணேசன், மகேந்திரன், கிரிஜா சேஷாத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 மாநாட்டில் ஏழை பூஜாரிகள் ஓய்வூதியம் பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.24 ஆயிரம் என்பதை ரூ.72ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூஜாரிகள் எண்ணிக்கையும் 4 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும்.
கிராம பூஜாரிகள் அனைவருக்கும் குறைந்தபட்சம் ரூ.5ஆயிரம் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பூஜாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம் மாநாட்டில் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன் நன்றி கூறினார்.நெல்லை கண்ணனுக்கு கண்டனம்சமீபத்தில் பொதுநிகழ்ச்சி ஒன்றில் பூஜாரிகளையும், அவர்களது பணிகளையும் நெல்லை கண்ணன் தரம் தாழ்த்தி பேசியுள்ளதாகவும், இதனால் அவரை கண்டிப்பதாகவும் கூட்டத்தில் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Village temple priests ,
× RELATED கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதிய...