×

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 105 ஏரிகளுக்கு சாத்தனூர் அணையில் இருந்து பிப்ரவரி மாதம் தண்ணீர் திறக்க முடிவு

திருவண்ணாமலை, ஜன.23: திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 105 ஏரிகளுக்கு, சாத்தனூர் அணையில் இருந்து பிப்ரவரி முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை. மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் தென்பெண்ணை ஆற்றின் வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை. அதனால், இந்த ஆண்டு சாத்தனூர் அணை முழு கொள்ளளவு நிரம்பவில்லை. சாத்தனூர் அணையின் மொத்த நீர் மட்டம் 119 அடி. நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. ஆனால், தற்போது அணை 97.70 அடி மட்டுமே நிரம்பியிருக்கிறது. கொள்ளளவு 3,427 மில்லியன் கன அடியாக உள்ளது. எனவே, சாத்தனூர் அணையில் இருந்து நேரடி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதையொட்டி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சாத்தனூர் அணை நீர்பாசனத்தை பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளின் கருத்துக்கேட்பு கூட்டம், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், டிஆர்ஓ ரத்தினசாமி, மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர்கள் மகேந்திரன் (திருவண்ணாமலை), ஜவஹர் (விழுப்புரம்), சாத்தனூர் அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது: சாத்தனூர் அணையில் தற்போது 3,427 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அதில், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பரப்புக்கு வழங்க வேண்டிய உரிமை நீர் 1,200 மி.க.அடி ஆகும். எனவே, மீதமுள்ள 2,227 மி.க.அடி நீரில், சாத்தனூர் அணை குடியிருப்புகளுக்கான குடிநீர், பூங்கா பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு 307.42 மி.க.அடி நீர் தேவைப்படுகிறது.

அதேபோல், நீர் இழப்பு 342.70 மி.க.அடி, திருவண்ணாமலை, தானிப்பாடி, சாத்தனூர் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் புதுப்பாளையம் நகராட்சி மற்றும் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்காக 11 மாதங்களுக்கு 322.22 மி.க. அடி நீர் இருப்பு வைக்க வேண்டும். மேலும் மண் தூர்வினால் தோராய நீர் இழப்பு 500 மி.க.அடி என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற தேவைகளுக்கு நீரை இருப்பு வைப்பது போக, 754.64 மி.க.அடி நீரை மட்டுமே விவசாய பாசனத்துக்கு திறந்துவிட வேண்டிய நிலை உள்ளது. எனவே, சாத்தனூர் வலதுபுறக் கால்வாய் வழியாக 453 மி.க.அடியும். இடதுபுற கால்வாய் வழியாக 302.40 மி.க. அடியும் தொடர்ந்து 35 நாட்களுக்கு திறக்க வாய்ப்பு உள்ளது. அதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 54 ஏரிகள் மற்றும் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு மூலம் 17 ஏரிகள் உட்பட மொத்தம் 105 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். மேலும், இரண்டு மாவட்டங்களிலும் 12,543 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பிப்ரவரி முதல் வாரத்தில் தண்ணீர் திறந்தால், தற்போது சாகுபடி செய்துள்ள நெற்பயிரை காப்பாற்ற முடியும் என பெரும்பான்மையான விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மேலும், கடைமடை பகுதியில் உள்ள ஏரிகள் வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றனர். எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்படும், அரசின் அனுமதி கிடைத்ததும் தண்ணீர் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.

Tags : lakes ,districts ,Thiruvannamalai ,Villupuram ,Saturnur Dam ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!