வேலூர், ஜன.23: தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் வாடகை தாரர்களே இல்லாத 8 சதவீதம் கடைகள் கணக்கெடுக்கப்பட்டு, நிலுவை தொகையை பட்டியலில் இருந்து கழிக்க முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஒசூர், நாகர்கோவில் உட்பட 15 மாநகராட்சிகள் உள்ளது. இந்த மாநகராட்சிகளுக்கு வருவாய் கிடைக்கும் வகையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு, அதில் உள்ள கடைகள் மாத வாடகைக்கு விடப்படுகிறது. ஒவ்வொரு மாநகராட்சிக்கும் சராசரியாக 500 முதல் 2,000 கடைகள் வரையில் கட்டப்பட்டு வாடகை விடப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு பல கோடிகளில் வருமானம் கிடைத்து வருகிறது. இதில் பழமைவாய்ந்த கட்டிடங்கள் சிதிலமடைந்து விட்டதால், அதனை வாடகைக்கு எடுத்தவர், காலி செய்துவிட்டு சென்றுவிடுவது, இல்லாவிட்டால் சம்மந்தப்பட்ட கடைக்காரர்கள் இறந்திருப்பது.
இதுபோன்ற காரணங்களால் மாநகராட்சிகளில் குறிப்பிட்ட கடைகள் வாடகை தாரர்களே இல்லாமல் உள்ளன. ஆனால் தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளின் வாடகை மற்றும் வரிவசூல் பட்டியலில் இதுபோன்ற கடைகளுக்கும் சேர்த்து வாடகை கணக்கிடப்பட்டு கணினிகளில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால் 100 சதவீதம் வாடகை பாக்கி வசூல் செய்திருந்தாலும், 100 சதவீதம் காட்டுவதில்லை.இதனால் மாநகராட்சிகளில் உள்ள அதிகாரிகள் ஓய்வு பெறும்போது, கமிஷனர், உதவி கமிஷனர், வருவாய் ஆய்வாளர், வரி வசூலிப்பாளர்கள் என்று அவர்கள் வாடகை பாக்கி செலுத்திய பின்னர் தான் ஓய்வு பெற முடியும் என்ற நிலை உள்ளது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் வாடகை தாரர்களே இல்லாத கடைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்தது. இதில 8 சதவீதம் கடைகளுக்கு வாடகை தாரர்களே இல்லாதது தெரியவந்தது. இந்த 8 சதவீதம் கடைகள் எத்தனை ஆண்டுகளாக காலியாக இருந்தது. என்று அந்த தொகையை கணக்கிட்டு, நிலுவை தொகை பட்டியலில் இருந்து கழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சிகளின் உயர்அதிகாரிகள் தெரிவித்தனர்.