×

கடலூர் மாவட்டத்தில் மழையால் பயிர்கள் பாதிப்பு

கடலூர், ஜன. 23:  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட மணிலா, நெல் பயிர்கள் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டுமென கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கடலூர் மாவட்ட குழுவினர் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது: கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் அமலாக்க போவதாக செய்திகள் வெளி வந்துள்ளது. தற்போது மத்திய அரசு மேற்கண்ட திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை, மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த தேவை  இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக மாற்றும் நடவடிக்கையாகும். எனவே, இத்திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் முழுமையாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபத்தில் பெய்த தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திருமுட்டம் வட்டங்களில் மணிலா பயிர், நெல் பயிர் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. கிள்ளை, பிச்சாவரம் பகுதியில் 500 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. பரவலாக நெல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புகையான் இலை கருகல் நோயால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருமுட்டம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நெல் விதை கலப்பு விதையாக இருந்ததால், வாங்கிய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை நிறுவனம் இந்த ஆண்டு கரும்பு கழிவு என்ற பெயரால் 10 சதவீதத்திலிருந்து 19 சதவீதம் விவசாயிகளிடம் அடாவடியாக பிடித்தம் செய்கின்றனர்.  ஆட்சியர் அழைத்து பேசியும் அவர்கள் அந்த செயலை செய்யும் நிலை உள்ளது. எனவே, ஆட்சியர் இந்த பிரச்னையில் தலையிட்டு ஆலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Cuddalore district ,
× RELATED மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி...