×

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனம் தொடங்க கிராமமக்கள் எதிர்ப்பு

திட்டக்குடி, ஜன. 23: திட்டக்குடியை அடுத்துள்ள இடைச்செருவாய் மற்றும் ஆ.பாளையம் கிராமங்களின் இடையே தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனம் துவங்குவதற்கு கட்டுமான பணிகள் முடிவடைந்து, நிறுவனம் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது.இதற்கு இரண்டு கிராம மக்களும் ஆட்சேபனை செய்தனர். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன் விவசாய பணிகளும் பாதிக்கப்படும் என கூறி உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் செய்ய போவதாக அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேலன், இரண்டு கிராம மக்களையும், நிறுவனத்தின் உரிமையாளரையும் அழைத்து தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தினார்.இதில் பொதுமக்கள் சார்பில், இந்த நிறுவனத்தை துவங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறை மற்றும் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறவில்லை எனவும், இவ்வாறு உரிய அனுமதியும் இன்றி சட்டத்திற்கு புறம்பாகவும், குடியிருப்பு பகுதியில் அப்பகுதி மக்களுக்கு இடையூறாகவும் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இந்த நிறுவனம் செயல்பட இருப்பதாக கூறி, அவ்வாறு அதை இயக்காத வகையில் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மினரல் வாட்டர் நிறுவனத்தை துவக்க கூடாது என முறையிட்டு ஒரு வழக்கு தெரடர்ந்துள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவு வரும்வரை குறிப்பிட்ட நிறுவனம் எந்தவிதமான செயல்பாடுகளையும் மேற்கொள்ள கூடாது எனவும், பொது மக்கள் இது சம்பந்தமாக எந்த ஒரு போராட்டத்தையும் நடத்த வேண்டாம் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் திசைக்கண்ணன், மகாலிங்கம், ஆறுமுகம், பெரியசாமி பெருமாள், வேல்முருகன், வெங்கடேசன், தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டனர். அதிகாரிகள் சார்பில் திட்டக்குடி சமூக பாதுகாப்பு தாசில்தார் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரராஜன், மங்களூர் ஒன்றிய ஆணையாளர் சங்கர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், காவல் துறை உதவி ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : drinking water company ,
× RELATED நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது...