×

வெம்பக்கோட்டை அருகே விபத்து ஏற்படுத்தும் சாலையோர பள்ளம் வாகன ஓட்டிகள் கலக்கம்

சிவகாசி, ஜன. 22: வெம்பக்கோட்டை அருகே, விபத்து ஏற்படுத்தும் சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் சென்று வருகின்றனர்.
சிவகாசியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் வெம்பக்கோட்டை கிராமம் உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகம் உட்பட அரசின் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஊர் வழியாக சங்கரன்கோவில், ஆலங்குளம், சாத்தூர், கோவில்பட்டி, திருவேங்கடம், ஏழாயிரம்பண்ணை போன்ற பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வெம்பக்கோட்டையில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருக்கும். இந்நிலையில், வெம்பக்கோட்டை பகுதி சாலை மிகவும் மோசமாக பயனற்ற நிலையில் இருந்தது. தற்போது மடத்துப்பட்டியில் இருந்து வெம்பக்கோட்டை வரையிலான சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. சாலை முன்பை விட 1 அடி வரை அகலப்படுத்தியுள்ளனர். பழைய சாலை மீதே புதிதாக சாலை போடட்பட்டுள்ளதால் சுமார் 1 அடி உயரம் வரை சாலை உயர்ந்துள்ளது. இதனால், சாலையின் இரு பக்க வாட்டு பகுதியிலும் பள்ளமாக உள்ளது.

இந்த பள்ளத்தில் கிராவல் மண் அடித்து சாலை சமன்படுத்தப்படவில்லை. இதனால் சாலையில் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் விலகிச் செல்லும்போது சாலையின் பக்கவாட்டில் வாகனங்கள் இறங்கினால் விபத்தில் சிக்கும் ஆபத்து நிலவு
கிறது. இரவு நேரங்களில் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இரவு நேரங்களில் சாலையில் பக்க வாட்டில் உள்ள பள்ளம் சரியாக தெரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று முந்தி செல்லும்போது, விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படும் ஆபத்து உள்ளது. சாலையோர பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் அருகில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள போலீசாரும் கண்டு கொள்வதில்லை. வெம்பக்கோட்டையில் அரசு துறையின் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இங்கு போதிய அடிப்படை வசதிகள், சாலைகள் மேம்படுத்தப்படவில்லை. வாகன போக்குவரத்துகளை முறைப்படுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலை விபத்துக்களும் நடக்கின்றன. எனவே, வெம்பக்கோட்டை பகுதியில் சாலையோரம் உள்ள பள்ளங்களை கிராவல் மண் அடித்து சீரமைக்க வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Accidents ,roadside ditch ,Vembakkotta ,
× RELATED சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்