×

உரிய நேரத்தில் அரசு கொள்முதல் செய்யாததால் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல் விற்பனை ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டம் என தேவதானம் பகுதி விவசாயிகள் வேதனை

ராஜபாளையம், ஜன. 22: ராஜபாளையம் அருகே, உரிய நேரத்தில் அரசு நெல் கொள்முதல் செய்யாததால், இருப்பு வைக்க இடமின்றி குறைந்த விலைக்க் வியாபாரிகளிடம் நெல்லை விற்றுவருகின்றனர். இதனால், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.ராஜபாளையம் அருகே, தேவதானம் பகுதியில் உள்ள சேத்தூர், முகவூர், தளவாய்புரம், செட்டியார்பட்டி, இளந்திரைகொண்டான், அயன்கொல்லங்கொண்டான் ஆகிய பகுதிகளில் கண்மாய்கள் மூலம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த வருடம் இந்த பகுதியில் விளைந்திருந்த நெல்லை தமிழக அரசு கிலோவுக்கு ரூ.18.60 விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்தது. இதனால், விவசாயிகள் பலன் அடைந்தனர். இந்த வருடம் நல்ல மழை பெய்ததால், நெல் சாகுபடி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டை போலவே இந்த வருடமும் அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இந்த வருடம் ஒரு கிலோ நெல்லுக்கு 50 பைசா உயர்த்தி ரூ.19.10 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால், நடவடிக்கை இல்லை. உரிய நேரத்தில் அரசு கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் நெல்லை அடிமாட்டு விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து பெரியகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் மாரியப்பன் கூறுகையில், நிலத்தை தொலியடிப்பது முதல், டிராக்டர், அறுவடை இயந்திரம் வரை டீசல் விலை ஏற்றம் காரணமாக வாடகை கணிசமாக உயர்ந்துள்ளது. நெல் நடுதல், வரப்பு அமைத்தல், உரம், பூச்சிக் கொல்லி மருந்து செலவு மற்றும் களை எடுக்க ஆள்கூலி உயர்வு என ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 முதல் 28 ஆயிரம் வரை செலவாகிறது. 72 கிலோ கொண்ட நெல் மூடையை அரசு நிர்ணயித்த விலைக்கு ரூ.1,375 க்கு விற்பனை செய்யும் பட்சத்தில் விவசாயிகளுக்கு ஓரளவு பலன் கிடைக்கும். ஆனால், தற்போது வியாபாரிகளிடம் மூட்டை ஒன்றுக்கு ரூ.1100க்கு விற்பனை செய்யும் போது, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை எந்த வழியில் ஈடு செய்வது என தெரியாமல் உள்ளோம்’ என்றார்.

பெரியகுளம் கண்மாய் பாசன விவசாயி, துரைபாண்டியன் கூறுகையில், ‘இங்கு அறுவடை செய்யும் நெல்லை இருப்பு வைக்க போதிய இடவசதி கிடையாது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளாக உள்ளதால், அறுவடையை காரணம் காட்டி கடன் வாங்கியே விவசாயம் செய்து வருகிறோம். அறுவடை செய்த நெல்லை நீண்ட காலம் வைத்திருந்தால் கடன் சுமை அதிகமாகும் என்பதால் கிடைத்த விலைக்கு நெல் மூட்டைகளை தற்போது வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம். போதுமான தண்ணீர் வசதி இருந்ததால் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 35 மூட்டை வரை கிடைத்துள்ளது. அரசு நிர்ணயித்த தொகை தங்களுக்கு கிடைத்தால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.48 ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால், வியாபாரிகளிடம் விற்கும்போது ரூ.38 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால், ஏக்கர் ஒன்றுக்கு தற்போது ரூ.10 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அறுவடை காலத்தில் தாமதமின்றி நெல் கொள் முதல் செய்ய அரசும், வேளாண்மை துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவதானம் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து தமிழக நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பார்த்திபனிடம் கேட்டபோது, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : area farmers ,Devadanam ,traders ,government ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...