×

வெயில் அதிகரிப்பால் தேனியில் பசும்புல் சந்தையில் நாளுக்கு நாள் விற்பனை அதிகரிப்பு பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு

தேனி, ஜன. 22: தேனி நகராட்சியில் அல்லிநகரத்தில் உள்ள பசும்புல் தினசரி சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது. கோடை தொடங்கும் முன்னரே பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் விவசாயிகள் பெரும்பாலும் தங்களின் உப தொழிலாக ஆடு, மாடு வளர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக தேனி மாவட்டத்தில் மழை சீராக இருந்ததால், பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் வெயில் காரணமாக பசுந்தீனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாடுகளுக்கு புண்ணாக்கு, மாட்டுத்தீவனம், பசுந்தீவனம் தான் மிக, மிக அத்தியாவசியமான உணவு. உலர் தீவனங்களை பால் மாடுகளுக்கோ, ஆடுகளுக்கோ வழங்க முடியாது.தேனியில் அல்லிநகரத்தில் பாத்திமா தியேட்டர் சந்திப்பு அருகே தினசரி பசும்புல் சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பசுந்தீவனங்களை மட்டும் வளர்த்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஒரு கட்டு ஐந்து ரூபாய். குறைந்தது ஒரு ஆட்டுக்கு தினமும் இரண்டு கட்டு, மாடுகளுக்கு அவற்றின் தன்மைக்கு ஏற்ப நான்கு முதல் ஆறு கட்டுகள் வரை தேவைப்படும். இந்த பசுந்தீவனம் கொடுத்தால் தான் பால் கறக்க முடியும். இல்லாவிட்டால் பால் அளவு குறைந்து விடும். எனவே தேனி மற்றும் கிராமப்பகுதி விவசாயிகள் இந்த சந்தைக்கு வந்து பசுந்தீவனங்களை வாங்கிச் செல்கின்றனர். இன்னும் கோடை தொடங்கவில்லை. காற்றிலும் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இந்த நிலையிலும், பசுந்தீவனம் அதிகம் விலைக்கு வாங்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அப்படியானால் கோடையில் பசுந்தீவனம் விற்பனை களை கட்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா