×

சாலை ஆக்கிரமிப்புகளால் பண்ருட்டி நகரில் கடும் போக்குவரத்து ெநரிசல்

பண்ருட்டி, ஜன. 22: பண்ருட்டி நகரில் சாலை ஆக்கிரமிப்புகளால் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் தினம் தினம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரம் முக்கிய வியாபார ஸ்தலமாகும். இதில் கடலூர் மெயின்ரோடு, ராஜாஜி சாலை, காந்திரோடு, கும்பகோணம் ரோடு ஆகியவற்றில் சிறு மற்றும் கனரக வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நான்குமுனை சந்திப்பு ஆகிய இடங்களில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்படுகிறது. இதுபோல் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகள் செல்ல முடியாமல் போகிறது. குறிப்பாக கடலூர் சாலையில் நான்குமுனை சந்திப்பிலிருந்து பேருந்து நிலையம் வரை காலை முதலே இரு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அங்குள்ள வங்கி, ஏடிஎம், கடைகள், கிளினிக்குகளுக்கு கூட பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல் பண்ருட்டி ராஜாஜி சாலையில் போக்குவரத்து போலீசார் பலமுறை எச்சரித்தும்கூட ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோவை நிறுத்தி சாலையை ஆக்கிரமித்துகொள்கின்றனர்.

இதனால் அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுகிறது. மேலும் கடைகாரர்களும் கடைகளின் முன்பாக சிறுசிறு கடைக்களை வைத்து சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பண்ருட்டி நகரில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நகராட்சி நிர்வாகத்தால் பொதுமக்கள் நடந்து செல்ல அமைத்துள்ள நடைபாதையை கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே பண்ருட்டி நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Panruti City ,
× RELATED இன்று பண்ருட்டி நகரமன்ற துணைத்தலைவர்...