பண்ருட்டி அருகே பல்லாங்குழி சாலையால் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்

பண்ருட்டி, ஜன. 22: பண்ருட்டி அருகே பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வராமல் மெத்தனப்போக்குடன் நடந்து கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஏரிப்பாளையம்-மேலிருப்பு சாலை உள்ளது. இந்த சாலை 7 மைல் தூரம் கொண்டது. இந்த தார்சாலை தரம் இல்லாமல் போடப்பட்டதால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. ஏரிப்பாளையம், செம்மேடு, மேலிருப்பு, கருக்கை ஆகிய ஊர் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் விளையும் விவசாய பொருட்களையும் விவசாயிகள் இந்த சாலை வழியாகத்தான் எடுத்து செல்கின்றனர். ஆனால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தாமதமாக வரவேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் இந்த சாலையில் செல்ல பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தற்போது பெய்த மழையால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் சேறும் சகதியுமாக காணப்படுவதால் அவ்வழியே செல்லும் மக்களின் உடைகளும் அசுத்தம் அடைகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குண்டும் குழியுமாக உள்ள தார்சாலையை உடனடியாக புதியதாக அமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Motorists ,road ,Panruti ,
× RELATED சாலை விதி விழிப்புணர்வை கண்டறிய...