×

மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம்

கடலூர், ஜன. 22: கடலூரில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 20ஆம் தேதி   துவங்கி வருகிற 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனையொட்டி  கடலூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணிகள், கண்காட்சிகள், சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக நேற்று முன்தினம் கடலூரில் ஹெல்மெட் அணிந்த 500 பெண்கள் பங்கேற்ற பைக் மற்றும் மொபட் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையேற்று துவக்கி வைத்தார். மேலும் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு கண்காட்சி பேருந்தையும் தொடக்கி வைத்தார்
 
நேற்று இரண்டாம் நாள் விழாவாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி  கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்தவர்கள் கடலூரில் முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர். அவர்களை தொடர்ந்து ஏராளமான கார்கள் பின்னால் ஊர்ந்து சென்றன.கடலூர் நகர அரங்கு அருகிலிருந்து இந்த நடைபயண விழிப்புணர்வு பேரணியை ஏ.டி.எஸ்.பி பாண்டியன் துவக்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கடலூர் சரவணன், சிதம்பரம் முக்கண்ணன் மற்றும் போக்குவரத்து துறை ஆய்வாளர்கள், போக்குவரத்து காவல்துறையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.நடைபயணம் பாரதிசாலை, அண்ணாபாலம், உழவர் சந்தை வழியாக சென்று முதுநகர் மோகினி பாலம் முன்னதாக நிறைவடைந்தது. நடை பயணம் மேற்கொண்ட மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சாலை பாதுகாப்பை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு சென்றனர்.


Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு