×

சாலை பாதுகாப்பு வாரவிழாவில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து விழிப்புணர்வு

பரமக்குடி, ஜன.22:  பரமக்குடி நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது. ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களில் வந்தவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து போக்குவரத்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நேற்று முன்தினம் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் சாலை போக்குவரத்து வார விழாவினை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, பரமக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தின் சார்பாக சாலை போக்குவரத்து வார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டு போக்குவரத்து விதிமுறைகள், ஹெல்மெட் அவசியம், வாகனங்களை இயக்கும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய சட்ட திட்டங்கள் குறித்த பதாதைகளை ஏந்தியபடி, போக்குவரத்து  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை பரமக்குடி டிஎஸ்பி சங்கர் மற்றும் பரமக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி ஐந்து முனை காந்தி சிலை வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தது. அப்போது, சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு ரோஜா பூ  கொடுத்து ஹெல்மெட் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்காமல், ரோஜா பூ கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வரம்பு குடியிருப்பு போக்குவரத்து உதவி ஆய்வாளர் அறிவழகன்,  ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ சங்கத்தினர் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : road safety festivals ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை