×

கழிவுநீர் கால்வாய் இல்லாததால் தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீர்

மேல்மலையனூர், ஜன. 22: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வரலாற்று சிறப்புமிக்க ஆன்மிக நகரமாக உள்ளது. அங்காளம்மனை வழிபட தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் அம்மனை தரிசிக்க வந்து செல்வது வழக்கம். அமாவாசை விழாவின் போது தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள வருவார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற மேல்மலையனூர் கிராமத்தில் முக்கிய வீதியாக பெரிய தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறங்களிலும் கடந்த 17 வருடங்களாக கழிவுநீர் கால்வாய் தூர் வாராமல் மூடிய நிலையில் உள்ளதால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தெருக்களில் தேங்கி நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல பேருந்து நிலையத்திலிருந்து பெரிய தெரு வழியாக செல்லும் போது கழிவுநீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி தொற்று நோய்கள் ஏற்படும் அபாய சூழ்நிலை உருவாகியுள்ளது.இது தொடர்பாக மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் இதுகுறித்த புகார் மனுவை நேற்று கொடுத்துள்ளனர்.  இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பெரிய தெருவின் இருபுறங்களிலும் வடிநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : streets ,
× RELATED அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த...