×

ஆண்டுக்கணக்கில் கிடப்பிலே கிடக்கும் ரயில்வே திட்டங்கள் இந்த பட்ஜெட்டிலாவது வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

காரைக்குடி, ஜன, 22: காரைக்குடி நகரின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு புதிய ரயில்வே திட்டங்கள் இந்த பட்ஜெட்டிலாவது அறிவிப்பு வருமாமென பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரைக்குடி பகுதியில் பல்கலைக்கழகம், மத்திய மின்வேதியியல் ஆய்வகம் என்பது உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும் இங்குள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட தமிழகம் முழுவதும் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொழில் துறையை பொறுத்தவரை புதுவயலில் அதிக அளவில் நவீன அரிசி ஆலைகள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் இப்பகுதியில் அனைத்து துறை வளர்ச்சிக்கும் மிக தேவையாக உள்ள ரயில்வே பணிகளும், புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டதோடு முடங்கிபோய் உள்ளன. கடந்த 2008ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் காரைக்குடி- மதுரை இடையே புதிய ரயில்பாதைக்கு ஆய்வு செய்யப்பட்டு, புதிய ரயில்பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்திட்டம் இதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் காரைக்குடியில் இருந்து ராமநாதரபுரம், தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கு 250 கி.மீக்கு மேல் ரயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் சுற்றுலா பயணிகளுக்கும், மாணவர்களுக்கும், பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொள்ள வரும் கல்வியாளர்களுக்கும் இப்பகுதியின் வளர்ச்சிக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். ஒவ்வொரு முறை ரயில்வே பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து ஏமாந்து வரும் நிலையில், இந்த பட்ஜெட்டிலாவது இத்திட்டங்களை அறிவிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதுகுறித்து கலைக்பொருட்கள் விற்பனையாளர் சித்திக் கூறுகையில், ‘மதுரை- காரைக்குடி இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டால் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பயனாக இருக்கும். குறிப்பாக வியாபாரிகளுக்கு இத்திட்டம் பெரிதும் துணையாக அமைந்து தொழில் வளம் பெருகும். ஆனால் ஒவ்வொரு பட்ஜெட் அறிவிக்கும் போது ஆவலுடன் எதிர்பார்ப்பதும் பின்னர் ஏமாந்துபோவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே இத்திட்டத்தை கொண்டு வர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் முழுமுயற்சி மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

Tags : public ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...