×

உண்மையை அறிய மூல ஆவணங்களை அளிக்க மறுப்பு வைகையை பட்டா போட்ட அதிகாரிகள் 80 அடியாக சுருங்கியது 120 அடி

மதுரை, ஜன.22: வைகையில் சில இடங்களில் ஓய்வு பெற்ற வருவாய்த் துறையினருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், நீர்வழித் தடங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி தண்ணீரை தேக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதேபோல் ஐகோர்ட் கிளையின் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதியிலுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுப்படி வைகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. குறிப்பாக விளாங்குடி, வண்டியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வைகை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. சில இடங்களில் ஓய்வு பெற்ற வருவாய்த் துறையினருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மதுரை நகருக்குள் 120 அடி அகலத்திற்கு வைகை உள்ளது. இதில் வைகை கரையோர சாலை அமைப்பதாக கூறி அதிகாரிகள் தலா 20 அடி வீதம் இருபுறமும் வைகை ஆற்றுக்குள் சாலை அமைத்து வருகின்றனர். இதனால் வைகையின் அகலம் 80 அடியாக குறைந்துள்ளது. உண்மையான எல்லையை கண்டறிய ஏதுவாக மூல ஆவணங்களை தர அதிகாரிகள் மறுக்கின்றனர். வருவாய் துறையினர் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

பரமக்குடி நகரின் கழிவுநீர் முழுமையாக வைகையில் தான் கலக்கிறது. அங்குள்ள சில நீர்நிலைகள் முழுமையாக ஆக்கிரமிப்பில் உள்ளன. விருதுநகர் மாவட்டத்திற்கு செல்லும் ஒரே நதியாக கிருதுமால் உள்ளது. பாண்டிய மன்னர்கள் காலத்தில் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டது. பல இடங்களில் தடமே இல்லாமல் ஆக்கிரமிப்பில் உள்ளது. மீதமுள்ள இடங்களில் கழிவுநீர் கால்வாயாக உள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள், தலைமை செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைகை மற்றும் கிருதுமால் நதி ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான நடவடிக்கை குறித்து மதுரை மற்றும் விருதுநகர் கலெக்டர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய ேவண்டும். வைகை ஆற்றின் எல்லையை வரையறை செய்வது தொடர்பாக நில அளவைத்துறை உதவி இயக்குநர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள நீர்நிலைகள், கால்வாய்கள் ஆகியவற்றிலுள்ள ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான நடவடிக்கை மற்றும் வண்டியூர் கண்மாய் பகுதியில் கண்டறியப்பட்ட 151 ஆக்கிரமிப்புகள் மீதான நடவடிக்கை தொடர்பாக மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். விசாரணையை ஜன.24க்கு தள்ளி வைத்தனர்.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...