×

கொடைக்கானலில் கேஸ் சிலிண்டருக்கு கட்டாய கூடுதல் வசூல் பொதுமக்கள் புகார்

கொடைக்கானல், ஜன. 22: கொடைக்கானலில் கேஸ் சிலிண்டருக்கு கட்டாய கூடுதல் தொகை வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் நகர் மற்றும் மலைக்கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய கொடைக்கானல் லா ஸ்காட் சாலையில் 1, அப்சர்வேட்டரி சாலையில் 1, உகார்தே நகரில் 1 என 3 ஏஜென்சிகள் உள்ளன. கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்ய இந்த ஏஜென்சிகளுக்கு கம்பெனி நிர்வாகத்தினர் கமிஷன் தனியாக கொடுக்கின்றனர். எனினும் ஏஜென்சி ஊழியர்கள் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர்.

ஒரு சிலிண்டருக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. சிலிண்டருக்கு உரிய தொகையை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் கொடைக்கானல் மலைப்பகுதியில்  சிலிண்டர் விநியோகிக்க நடக்கும் இந்த கட்டாய கூடுதல் வசூலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கூடுதல் கட்டணம் குறித்து கேள்வி கேட்டால் இனி நீங்களே ஏஜென்சி அலுவலகத்திற்கு வந்து சிலிண்டரை எடுத்து கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் கூறுகின்றனர். மேலும் அடுத்த முறை புக் செய்தால் மிகவும் காலதாமதமாக சிலிண்டர் விநியோகிக்கின்றனர். எனவே நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விடும் விதமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் காஸ் ஏஜென்சிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்