×

பழநியில் நகைக்கடை உரிமையாளரை தூக்கி சென்ற ‘மர்ம’ போலீசார் கடத்தல் புரளியால் பரபரப்பு

பழநி, ஜன. 22: பழநியில் நகைக்கடை உரிமையாளரை போலீசார் அழைத்து சென்ற நிலையில் கடத்தல் புரளியால் பரபரப்பு
ஏற்பட்டது. பழநி டவுன், சிதம்பரநாதன் சந்தை சேர்ந்தவர் தன்ராஜ் (63). பழநி பஸ்நிலையம் எதிரில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் தன்ராஜ் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர் உறங்கி கொண்டிருந்தனர். நேற்று காலை சுமார் 5 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் தன்ராஜின் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். தன்ராஜ் கதவை திறந்ததும் அக்கும்பல் தாங்கள் போலீஸ் என்றும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி அவரை அவசரமாக வேனில் அழைத்து சென்றுவிட்டனர். நேற்று காலை 11 மணி வரை தன்ராஜை அழைத்து சென்றது யார் என்று தெரியவில்லை. உள்ளூர் போலீசாருக்கும் அழைத்து சென்றது யார் என்ற விபரம் தெரியாததால் தன்ராஜ் மர்மநபர்களால் கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் பரவியது. இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. தன்ராஜின் வீட்டிற்கு உறவினர்கள், நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் குவிந்தனர். டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீசார் தன்ராஜின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்தபோது வேனில் தன்ராஜ் அழைத்து செல்லப்படுவது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து போலீசார் சென்னை தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரச்னையின் தீவிரம் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தன்ராஜை அரியலூர் மாவட்டம், பாடலூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகே தன்ராஜின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் நிம்மதியடைந்தனர். நகை வாங்கியது தொடர்பான விசாரணைக்கு அழைத்து சென்றிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வர்த்தகர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது, வெளியூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றால், உள்ளூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்து சென்றிருக்க வேண்டும். போலீசார் அழைத்து சென்றனரா? அல்லது மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டனரா என்று தெரியாத நிலை 7 மணிநேரமாக நீடித்தது. விபரங்கள் தெரியாத அந்த 7 மணிநேரத்தில் வீட்டில் உள்ளவர்களின் மனநிலையை போலீசார் உணர்ந்து கொள்ள வேண்டும். மாநில நிர்வாகிகளிடம் பேசி இதுபோன்ற செயல்களுக்கு உரிய பதில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.

Tags : jewelery owner ,Palani ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது