×

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: காட்பாடியில் கிராமமக்கள் சோகம்; அமைச்சர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி

வேலூர்: நீட் தேர்வு தோல்வி பயம் காரணமாக, தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு  அமைச்சர் ஆர்.காந்தி, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்கள். மாணவியின் தற்கொலையால், காட்பாடியில் கிராமமக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். தமிழகத்தில்,  நீட் தேர்வுக்கு மருத்துவ படிக்கும் மாணவர்களிடையே  கடும் எதிர்ப்பு நிலவுகிறது. தேர்வுகள் கடினமாக இருப்பதால் சில மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தாண்டு நீட் தேர்வு கடந்த 12-ந் தேதி நடந்தது. இதன்பின், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த தனுஷ் (19), அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கனிமொழி (வயது 19) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகத்தில் கடும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில், நேற்றும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் விவரம் வருமாறு:- வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா லத்தேரி அடுத்த தலையராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 63). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ருக்மணி (50). இவர்களுக்கு 4 மகள்கள். இவர்களில் 3 பேருக்கு திருமணமாகிவிட்டது. இவர்களது கடைசி மகள் சவுந்தர்யா (17). இவர் தனது பிளஸ்2 வரையிலான பள்ளிப்படிப்பை வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் படித்து முடித்தார். இவர், 10ம் வகுப்பு தேர்வில் 413 மதிப்பெண்களும், பிளஸ்-2 தேர்வில் 510 மதிப்பெண்ணும் பெற்றிருந்தார். இந்த மதிப்பெண்களை கொண்டு மருத்துவம் படிக்க ஆசைப்பட்டார். இதற்காக, நீட் பயிற்சி பெற்றிருந்தார்.இதற்கிடையில் வேலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பில் அவரை பெற்றோர் சேர்த்துள்ளனர். ஆனாலும் தான் ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் சவுந்தர்யா இருந்து வந்துள்ளார். கடந்த 12ம் தேதி காட்பாடி தனியார் பள்ளியில் நீட் தேர்வை எழுதினார். அன்று மாலை வீடு திரும்பிய அவர், நீட் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தனது பெற்றோரிடம் கூறி கதறினார். அவரை பெற்றோர், சமாதானம் செய்துள்ளனர். ஆனாலும், அவர் சோகமாகவே காணப்பட்டார்.இந்தநிலையில், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாததால் சவுந்தர்யா, கதவுகளை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீடு திரும்பிய தாய் ருக்மணி வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதை பார்த்து கதவை தட்டினார். திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார்.இதுகுறித்து அக்கம்பக்கத்தினர், லத்தேரி போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து உடல் ஒப்படைக்கப்பட்டது. தகவல் அறிந்து, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் வீட்டுக்கு நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். அதேபோல் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மநீம தலைவர் கமலஹாசன் மாணவியின் பெற்றோரிடம் போனில் பேசி ஆறுதல் கூறினார். * நீட் தேர்வு பலி 19 ஆனதுதமிழத்தில் நீட் தேர்வு காரணமாக, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். அப்போது முதல் நேற்று சவுந்தர்யா வரை மொத்தம் 19 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.* டாக்டராவதே லட்சியம்சவுந்தர்யாவின் வீட்டின் அருகே வசிப்பவர்கள் கூறுகையில், ‘‘மிகவும் சாதுவான மாணவி சவுந்தர்யா. எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பார். படிப்பில் படுசுட்டியாக இருந்தார். தேர்வு நேரத்தில் மட்டுமல்ல, தினசரி வீட்டு வேலை முடிந்ததும் உடனடியாக படிக்க சென்றுவிடுவார். தனது ஒரே லட்சியம் டாக்டராக வேண்டும் என அடிக்கடி கூறிவந்தார். நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்தும் வந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை தேர்வுக்கு சென்று வந்த பிறகு மிகவும் விரக்தியுடன் காணப்பட்டார். வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார்’’ என்று தெரிவித்தனர். …

The post நீட் தேர்வு தோல்வி பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: காட்பாடியில் கிராமமக்கள் சோகம்; அமைச்சர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Katpadi ,Vellore ,Tamil Nadu ,
× RELATED வெயிலில் சுருண்டு விழுந்து ஒருவர் பலி