×

போளூரில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது நூற்றாண்டு விழா காணும் அரசு பள்ளியின் அவலம்

போளூர், ஜன.22: போளூரில் நூற்றாண்டு விழா காணும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனை கல்வித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடந்த 12.10.1920 அன்று நடுநிலைப் பள்ளியாக துவக்கப்பட்டது. 18.6.1924 அன்று உயர்நிலைப் பள்ளியாகவும், 1.7.1978 அன்று மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளி துவக்கி 100 ஆண்டுகள் ஆகிறது. எனவே, பள்ளி நூற்றாண்டு விழாவை விரைவில் கொண்டாட பெற்றோர் கழக நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போளூர் அரசு ஆண்கள் பள்ளி துவக்கப்பட்டபோது சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்றனர். அதற்கு ஏற்ப கட்டிட வசதியும் செய்து தரப்பட்டது.காலப்போக்கில் மாம்பட்டு, அத்திமூர், காங்கேயனூர், பெலாசூர், சானாராப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பள்ளி துவங்கப்பட்டு, போளூர் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவானது. தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தற்போது பள்ளியில் பழமையான கட்டிடம் என்றாலும, பல கட்டிடங்கள் நல்ல தரமாக உள்ளது. சில கட்டிடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை சீர் செய்ய வேண்டும். பல வகுப்பறைகளில் தரைகள் குண்டு, குழியுமாக உள்ளது, கதவுகள் உடைந்துள்ளது. சில வகுப்பறைகளில் மின்சார வசதி இல்லாததால் இருண்டு காணப்படுகிறது. சில வகுப்பறைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுகிறது. மேலும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ஆய்வகம் கட்டப்பட்டது. அதனை பயன்படுத்தி வந்த நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக, அந்த ஆய்வக கட்டிடம் இடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இதுவரை புதிய ஆய்வகம் கட்டப்படவில்லை. இதனால் அவதிப்பட்ட மாணவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.பள்ளிக்கு அருகே ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. விவசாயம் படிக்கும் மாணவர்கள், அந்த நிலத்தில் பயிர் வைத்து, விவசாயம் பற்றி தெரிந்து கொள்வார்கள். அந்த நிலத்தில் பயிர் செய்து 40 மூட்டைகள் நெல் அறுவடை செய்துள்ளனர். தற்போது பராமரிப்பு இல்லாத காராணத்தால் அந்த நிலம் இருக்கும் இடம் தெரியவில்லை. இதனால் வேளாண்மை படிக்கும் மாணவர்கள் வேதனை அடைகின்றனர்.

பள்ளியில் கைவேலை பிரிவில் கற்று கொடுக்கும் ஆசிரியர் இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. கழிப்பறைகள் சுகாதார சீர்கேடாய் உள்ளது. இதனால் மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் அவதிப்படுகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது. சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் உள்ளது. பள்ளியின் பின்புறம் சுற்றுச்சுவர் அருகே காடுபோல் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் சமூக விரோதிகள் பள்ளி உள்ளே புகுந்து அங்கு அமர்ந்து குடிக்கின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இப்பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப் போகிறது. எனவே, அடிப்படை வசதிகள் இன்றி பரிதவிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும், பள்ளியை சமூக விரோதிகளின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டும், நூற்றாண்டு விழா காணும் இப்போதாவது பள்ளிக்கு விடிவு காலம் வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : government school ,Polur ,
× RELATED அரசு பள்ளி முன்பு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்