×

உயிர்க்கொல்லி நோய் பரவல் எதிரொலி சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை

சென்னை: சீனாவில் இருந்து வரும் பயணிகள் கடுமையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகே விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர். சீனாவில் உயிர்க்கொல்லி நோய் கோரோனா வேகமாக பரவிவருகிறது. கடந்த 2003ம் ஆண்டு பரவிய இந்த வைரசால் 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 17 ஆண்டுகளுக்குப் பின்பு சீனாவில் இந்த வைரஸ் பரவுவது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் பரவாமல் இருக்க ஒவ்வொரு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் உத்தரவின்பேரில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வருகைப் பகுதியில் பயணிகள் விமானத்தை விட்டு கீழே இறங்கி குடியுரிமை சோதனைக்கு செல்வதற்கு முன் 3 சிறப்பு கவுன்டர்கள் அமைத்துள்ளனர். ஒவ்வொரு கவுன்டரிலும் 2 மருத்துவ உதவியாளர்கள் வீதம்  6 மருத்துவ உதவியாளர்களும் அவர்களுக்கு தலைமையாக மருத்துவர் ஒருவரும் பணியில் உள்ளனர்.

ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு வரும் கேத்தே பசிபிக் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் 368 பயணிகள் வந்தனர், அவர்கள் அனைவரும்  பரிசோதனை கவுன்டருக்கு அழைத்து வரப்பட்டனர். ஒவ்வொரு கவுன்டரிலும் மைக் போன்ற ஒரு மருத்துவக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.  ஒவ்வொரு பயணியாக வரிசையில் வந்து மைக்கில் ஊத வேண்டும். அந்த கருவி கணினியுடன் தொடர்புள்ளது. மருத்துவ உதவியாளர்கள், மருத்துவர்கள் மாஸ்க் அணிந்திருப்பார்கள். பயணிகள் ஊதும்போது கம்ப்யூட்டரில் மர்மக் காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ் இருப்பதற்கான அறிகுறி இருக்கிறதா என ஆய்வு செய்வார்கள். இந்த பரிசோதனையில் நோய் இல்லாவிட்டால் நேரடியாக குடியுரிமை சோதனைக்கு சென்றுவிடலாம். மர்ம வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் சீனா உள்ளிட்ட வெளிநாட்டினராக இருந்தால் அவர்கள் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

ஒருவேளை இந்தியருக்கு நோய் அறிகுறி தென்பட்டால் அவர்களை வெளியில் விடாமல் விமான நிலையத்தில் இருந்தே தனி ஆம்புலன்ஸில் ஏற்றி மிகுந்த பாதுகாப்புடன் சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுவர்.  ஆனால் நேற்று வந்த 368 பயணிகளில் யாரும் நோய் அறிகுறி இல்லை. எனவே, அனைத்து பயணிகளும் குடியுரிமை சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சோதனை டெல்லியில் உள்ள தலைமை மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்று கூறப்படுகிறது.

Tags : examination ,travelers ,China ,spread ,
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...