×

தாராபுரம் பகுதியில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் வீசிய குப்பையால் பாதிப்பு.

தாராபுரம், ஜன. 22:   தாராபுரம் வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வீசும் குப்பையால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பழனியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேர்த்திக்கடன் செலுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தாராபுரம் வழியாக ஆண்டுதோறும் பாதயாத்திரையாக நடந்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு பாதயாத்திரையாக இதுவரை சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தாராபுரம் வழியாக பழனிக்கு நடந்து சென்றனர். மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சாலை விபத்துகளில் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு ரூ.8 கோடி செலவில் தாராபுரத்தில் இருந்து பழனி வரை சாலையோரத்தில் தனி பாதை அமைத்துள்ளது. ஆனால் இது பற்றிய போதிய விழிப்புணர்வு அளிக்காததால், தனி வழி பாதையை பயன்படுத்தாமல் பக்தர்கள் பிரதான சாலையிலேயே நடந்து செல்கின்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மூன்று வேளை உணவுக்காக ஆங்காங்கே உணவுகள் சமைத்து சாப்பிட்டும், ஆன்மீக அன்பர்கள் வழங்கும் அன்னதானத்தை சாப்பிட்டும் செல்கின்றனர். ஆனால் சாப்பிட்ட பின்னர் பாக்குமட்டை தட்டு, பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை ஆங்காங்கே வீசி செல்கின்றனர்.

மேலும் கழிப்பிட வசதி இல்லாததால் சாலையோரங்களிலும், விவசாய விளை நிலங்களிலும் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதில் அலங்கியம் அரசு பள்ளி அருகே மலை போல் பாக்கு மட்டை தட்டுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தாராபுரம் - பழனி வரை சுமார் 45 கி.மீ. தூரத்துக்கு சுகாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், பள்ளி மாணவ  மாணவிகளுக்கும் அவதியடைந்து வருகின்றனர். இதனை அறிந்த அலங்கியம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் மணிகண்டன், ராஜா, பரமசிவம், வி.சி.க. அழகர்சாமி, மவுலானா ஆகியோர் குழுவாக அலங்கியம் முழுவதும் சிதறிக் கிடந்த குப்பைகளை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். தாராபுரம் பகுதியில் பக்தர்களுக்கு சாலையோர இலவச கழிப்பிடம், தண்ணீர் வசதி மற்றும் தங்குமிட வசதிகளையும், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த தூய்மைப் பணியாளர்கள் வசதியையும் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palani Pilgrimage ,area ,Darapuram ,
× RELATED தாராபுரம் அருகே சூறாவளியுடன் கன மழை...