×

பாரம்பரியம் மிக்க தொட்டபெட்டா, சின்கோனா சிறைச்சாலையை புனரமைக்க கோரிக்கை

ஊட்டி, ஜன. 22:நடுவட்டம் சின்கோனா பகுதியில் உள்ள சிறையை பொலிவுப்படுத்தியது போல், தொட்டபெட்டா சின்கோனா சிறைச்சாலைையயும் புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டம், அவர்களின் சொர்க்க பூமியாக இருந்தது. அதேசமயம் சுதந்திர போராட்ட தியாகிகளின் நரக பூமியாகவும் இருந்தது. காரணம், தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவில் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்களை கண்டறிந்து, அவர்களை அடித்து துன்புறுத்தியது மட்டுமின்றி பலரையும் அழைத்து வந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறைகளில் அடைத்து வைத்து, இங்கேயே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக,  ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டா, நடுவட்டம், சின்கோனா கட்டிடங்கள் மற்றும் மஞ்சூர் அருகேயுள்ள கேரிங்கடன் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்ட அலுவலகம் ஆகியவை சிறைகளாக இருந்தது. இவைகள் மூன்றுமே மிக மோசமான சிறைகளாக இருந்துள்ளன. கடந்த 1860ம் ஆண்டு இந்த சிறைகளில் தான் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்களில் தூக்கு மேடைகள், கைதி அறைகள் என சாட்சிகளும் உள்ளன. மேலும், தொட்டபெட்டா சின்கோனா பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான கற்பூர மரங்கள் மற்றும் இதர மரங்கள் எல்லாம் 100 ஆண்டுகளுக்கு முன் கைதிகளால் நடவு செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 1905க்கு பின், இந்த சிறைச்சாலைகள் தான் சின்கோனா அலுவலகமாக மாற்றப்பட்டது. இந்த அலுவலகம் கடந்த 2000ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. அதன்பின், சின்கோனா மருந்து தயாரிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால், இந்த அலுவலகங்கள் மூடப்பட்டன. இதனால், இந்த கட்டிடங்கள் பாழடைந்தது. இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள நடுவட்டம் பகுதியில் உள்ள சின்கோனா கட்டிடம்  மீண்டும் பொலிவுப்படுத்தப்பட்டு, தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள தூக்குமேடை, கைதி அறைகள் மற்றும் உணவு அறைகள், அழைப்பு மணிகள் போன்றவை தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.

இதேபோல், தொட்டபெட்டா சின்கோனா வளாகத்தில் உள்ள சிறைச்சாலையையும் புனரமைத்து அருங்காட்சியமாக மாற்றினால், தொட்டபெட்டா செல்லும் பல சுற்றுலா பயணிகள் இந்த பாரம்பரிய மிக்க கட்டிடங்களை பார்க்க முடியும். இல்லையேல், இந்த கட்டிடத்தை புனரமைக்க வேண்டும்.
புனரமைப்பதன் மூலம் பல ஆண்டுகள் இது போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் கஷ்டப்பட்ட மற்றும் தூக்கில் இடப்பட்ட சிறைச்சாலைகளை மக்கள் மனிதில் வைத்துக் கொள்ள முடியும்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்