×

யானைகள் வழித்தடத்தில் மூடப்பட்ட காட்டேஜ்கள் மீண்டும் இயக்கம்?

ஊட்டி, ஜன. 22:மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்து காட்டேஜ்கள், ரிசார்ட்கள் மூடப்பட்டன. இந்நிலையில், அதிகாரிகள் துணையோடு, பின்புற வழியாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த 36 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட போதிலும், பின் வழி திறக்கப்பட்டு தொடர்ந்து காட்டேஜ்கள் மற்றும் ரிசார்ட்டுகள் இயங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இயற்கையோடு ஒன்றிய சுற்றுலாவையே விரும்புகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிகள் மற்றும் விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதையும், அங்கு தங்குவதையும் விரும்புகின்றனர். சிலர் அட்வன்சர் டூரிசம் என்ற பெயரில் வனங்களுக்குள் நடைபயணம் மேற்கொள்வது, வாகனங்களில்  செல்வதற்கு ஆசைப்படுகின்றனர். இதை பயன்படுத்திக் கொள்ளும் சிலர் இங்குள்ள வனங்களை ஒட்டிய பகுதியில் காட்டேஜ்கள், ரிசார்ட்களை அமைத்து, சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றனர்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொக்காபுரம், மசினகுடி, மாவனல்லா போன்ற பகுதிகளில் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏராளமான காட்டேஜ் ரிசார்ட்கள் கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான கட்டிடங்கள் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளது.
இதனால், இங்குள்ள யானைகள் தங்களது வழித்தடங்களை பயன்படுத்த முடியாமல் போனது. வழி மாறி செல்லும் போது மனித விலங்கு மோதல் ஏற்படுகிறது. மேலும், அவைகளின் வாழ்வாதாரம் மற்றும் இனப்பெருக்கம் உள்ளிட்டவை பாதிக்கிறது. இதனை காரணம் காட்டி யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என சில சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து, யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்கள், வேலிகள் மற்றும் தடுப்பு சுவர்கள் போன்றவைகளை அகற்றவும், கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன் உத்தரவிட்டது.

மசினகுடி மற்றும் ெபாக்காபுரம் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் 36 கட்டிடங்கள் கட்டப்பட்டது தெரியவந்தது. இவைகளில் பல கட்டிடங்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களாக இருந்தன. சில கட்டிடங்கள் குடியிருப்புகளுக்கான அனுமதி பெறப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் அங்கு சென்ற அதிகாரிகள் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த 36 கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். இதன் மூலம் மசினகுடி பகுதியில் காட்டு யானைகளுக்கு இருந்த தொல்லைகள் அகன்றது. இந்நிலையில், தற்போது, மூடப்பட்ட பெரும்பாலான காட்டேஜ்கள் பின் பக்க கதவுகளை திறந்து வழக்கம் போல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மசினகுடி பகுதியில் இயங்கி வரும் காட்டேஜ் உரிமையாளர்களுக்கு பெரும்பாலான அதிகாரிகள் சேவகர்களாக உள்ளனர். இதனால், மூடப்பட்ட கட்டிடங்கள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. உயர் அதிகாரிகள் யாரேனும் ஆய்விற்கு சென்றால், சம்பந்தப்பட்ட கட்டிடம் பூட்டப்பட்டு கிடப்பது போல், அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகின்றனர். அதிகாரிகள் அங்கிருந்து சென்ற பின் வழக்கம் போல் இந்த கட்டிடங்கள் செயல்படத்துவங்கி விடுகிறது. யானைகள் வழித்தடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டால் மட்டுமே யானைகள் வழித்தடம் மீட்க வாய்ப்புள்ளது என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Elephants Cottages ,The Cave ,
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி