×

ஜலகண்டாபுரத்தில் குப்பைக்கிடங்கிற்கு மர்மநபர்கள் தீ வைப்பு

ஜலகண்டாபுரம், ஜன.22: ஜலகண்டாபுரத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கிற்கு நேற்றிரவு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை புகை மண்டலம் சூழ்ந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் 7வது வார்டு கம்போஸ்ட் ரோடு பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. இதில் நாள்தோறும் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள், டிராக்டர் மூலம் கொண்டு வரப்பட்டு கொட்டி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் அப்பகுதியில் மலைபோல் குவிந்துள்ளது. இந்நிலையில் குப்பைக்கிடங்கிற்கு மர்ம நபர்கள் நேற்றிரவு தீ வைத்துள்ளனர். மேலும் காற்று பலமாக வீசியதில் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்ததுடன், கிடங்கை சுற்றிலும் பரவியது.

இதனால் சுமார் 100 அடி உயரத்திற்கும் மேலாக, புகை எழுந்ததால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டதுடன், இரவு முழுவதும் குழந்தைகளை வைத்துக்கொண்டு தூங்க முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இது குறித்து நங்கவள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், இரவு முழுவதும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குப்பை கிடங்கிற்கு அடிக்கடி தீ வைக்கும் மர்ம நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Jalakandapuram ,garbage dump ,
× RELATED சரக்கு வாகனத்தில் தீ