×

வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதியாமல் புதிய ஹெல்மெட் வாங்கி வரச்செய்து விழிப்புணர்வு

தர்மபுரி, ஜன.22: சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி தர்மபுரி டவுன் போலீசார் ஹெல்மெட் அணியாத டூவீலர் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் புதிய ஹெல்மெட் வாங்கி வரச்செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழா துவங்கியது. 2வது நாளான நேற்று எஸ்.பி. ராஜன் உத்தரவின்பேரில், டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் தலைமையில் எஸ்.ஐ.க்கள் கிருஷ்ணவேணி, சின்னசாமி உள்ளிட்ட போலீசார் சேலம் பைபாஸ் சாலையில் பைக்குகளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் 100 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் புதிய ஹெல்மெட் வாங்கி வந்து ரசீதை காண்பிக்குமாறு போலீசார் கூறினர். இதையடுத்து, டூவீலர் வாகன ஓட்டிகள் உடனடியாக கடைகளுக்கு சென்று புதிய ஹெல்மெட் மற்றும் ரசீதுடன் டவுன் காவல் நிலையத்திற்கு சென்றனர்.

அங்கிருந்த டி.எஸ்.பி. ராஜ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் கூறும்போது, டூவீலரை இயக்கும் முன்பு ஹெல்மெட்டுடன் தான் டூவீலரை இயக்குவேன் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு டூவீலரை இயக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருவரையும் நம்பி ஒரு குடும்பம் உள்ளது என்பதை மனதில் நிறுத்தி அனைவரும் பைக் ஓட்டும்போது அவசியம் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக வாகனத்தை இயக்குங்கள் என்றார். இச்சம்பவம் வாகன ஓட்டிகளிடையே ஹெல்மெட்டின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Tags : motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...