சங்ககிரியில் சாலை பாதுகாப்பு வாரவிழா ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு ரோஜா பூ கொடுத்த பெண் போலீசார்

சேலம், ஜன.22: சங்ககிரியில் நடந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில், சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு பெண் போலீசார், ரோஜா பூ கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நாடு முழுவதும் 31வது தேசிய சாலை பாதுகாப்பு வாரவிழா கடந்த 20ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி வரையில் சாலை விபத்து தவிர்ப்பு தொடர்பாக பல்வேறு வகையில் போலீசாரும், வட்டார போக்குவரத்து துறையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதில், சேலம் மாவட்டத்தில் மல்லூர், ஓமலூர், சங்ககிரி, வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சங்ககிரியில் நடந்த சாலை பாதுகாப்பு வார விழாவில், டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் போலீசார் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில், சங்ககிரி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களுக்கு ரோஜா பூக்களை பெண் போலீசார் கொடுத்தனர். அப்போது அவர்கள், ‘மிக அன்போடு நாங்கள் கேட்டுக்கொள்வது, இருச்சக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். உங்களை நம்பி வீட்டில் குடும்பம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். சாலை விதிகளை கடை பிடிப்பதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்,’’ என்றனர். இதேபோல், வாழப்பாடியில் டிஎஸ்பி சூரியமூர்த்தி தலைமையில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. அதிவேகமாக செல்லக்கூடாது. கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும், என வலியுறுத்தினர். தொடர்ந்து, 27ம் தேதி வரையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: